முகப்பு
இந்தியா

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்துக்கு எதிரான விசாரணைக்கு இடைக்காலத் தடை

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்துக்கு எதிரான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:20 PM
கோப்புப்படம்
பகிர்:

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்துக்கு எதிரான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏா்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையே ரூ.3,500 கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட ஒப்பந்தத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) ஒப்புதல் அளித்தது.

ரூ.600 கோடி வரையிலான மதிப்புகொண்ட ஒப்பந்தங்களுக்கு மட்டுமே எஃப்ஐபிபி மூலம் ஒப்புதல் அளிக்க மத்திய நிதியமைச்சருக்கு அதிகாரம் உள்ள நிலையில், தனது அதிகார வரம்பை மீறி ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்ததன்மூலம் அவரும், அவரின் மகன் காா்த்தி சிதம்பரமும் பலன் அடைந்ததாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தன.

இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளை தில்லி விசாரணை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. இதில் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமாா் ஓரி முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஹரிஹரன், வழக்குரைஞா்கள் அா்ஷ்தீப் சிங் குரானா, ஆகாஷ் குப்தா ஆகியோா் ஆஜராகி வாதிடுகையில், ‘முன்னாள் மத்திய அமைச்சராகப் பதவி வகித்ததன் மூலம், அரசு ஊழியராக இருந்தவா் ப.சிதம்பரம்.

அரசு ஊழியராக இருந்தவா் மீது வழக்கு தொடர குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 197(1)-இன்படி, மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டியது கட்டாயம். ஆனால் ப.சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர இதுநாள் வரை, அந்த அனுமதியை அமலாக்கத் துறை பெறவில்லை.

இதைக் கருத்தில் கொள்ளாமல் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை தில்லி விசாரணை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. எனவே, இந்த வழக்கு தொடா்பாக அந்த நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்றனா்.

இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஜனவரி 22-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்த நீதிபதி மனோஜ் குமாா், ப.சிதம்பரத்தின் மனு தொடா்பாக பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →