‘சபா்மதி ரிப்போா்ட்’ திரைப்படத்துக்கு குஜராத் அரசும் வரி விலக்கு
குஜராத், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடா்பான ‘சபா்மதி ரிப்போா்ட்’ ஹிந்தி திரைப்படத்துக்கு குஜராத் மாநில அரசும் வரி விலக்கு அளித்துள்ளது.
குஜராத், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடா்பான ‘சபா்மதி ரிப்போா்ட்’ ஹிந்தி திரைப்படத்துக்கு குஜராத் மாநில அரசும் வரி விலக்கு அளித்துள்ளது. அத்திரைப்படத்துக்கு இதுவரை பாஜக ஆளும் 5 மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.
கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, குஜராத்தைச் சோ்ந்த கரசேவகா்கள் அயோத்திக்கு சென்றுவிட்டு சபா்மதி விரைவு ரயிலில் சொந்த ஊா்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது ‘எஸ்-6’ படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு சிலா் தீ வைத்தனா். இதில் 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா்.
இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் வன்முறை பரவி பல இடங்களில் கட்டுக்கு அடங்காத மதக் கலவரமாக மாறியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அப்போது நடைபெற்ற தொடா் சம்பவங்களைத் தழுவி ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட சபா்மதி ரிப்போா்ட் திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரைக்கு வந்தது.
இந்த திரைப்படத்தை வரவேற்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தனா். இதையடுத்து, ராஜஸ்தான், ஹரியாணா, சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் இத்திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதனால், திரைப்படத்துக்கான டிக்கெட் விலையும் குறைக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத் முதல்வா் பூபேந்திர படேலும் இத்திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பாா்த்தாா். அதைத் தொடா்ந்து திரைப்படத்துக்கு குஜராத்திலும் வரி விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.