ராகுல் காந்தி PTI
இந்தியா

முதல்வர்களையே கைது செய்யும்போது அதானியை பாதுகாப்பது ஏன்? ராகுல்

தொழிலதிபர் அதானியை பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பதாக ராகுல் காந்தி விமர்சனம்.

DIN

தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த ஊழலுக்கும் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும், அதானியை அவர் பாதுகாப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது:

“இந்திய சட்டத்தையும் அமெரிக்க சட்டத்தையும் அதானி மீறியிருக்கிறார் என்பது தற்போது அமெரிக்கா மூலம் வெளிவந்துள்ளது. அவர் மீது அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நாட்டில் சுதந்திரமாக அதானி சுற்றிவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. முதல்வர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், ரூ. 2,000 கோடி ஊழலை அதானி செய்துள்ளார், இன்னும் பல ஊழல்கள் இருக்கலாம். ஆனால், அதானியை பிரதமர் பாதுகாத்து வருகிறார். அதானியுடன் பிரதமரும் ஊழலில் ஈடுபட்டுள்ளார்.

நாங்கள் இந்தப் பிரச்னையை எழுப்புவோம். எதிர்க்கட்சித் தலைவராக இந்த பிரச்னையை எழுப்புவது என் கடமை. பிரதமர் மோடி 100 சதவிகிதம் அவரை பாதுகாத்து வருகிறார். இந்தியாவில் ஊழல் மூலம் சொத்துகளை சம்பாதித்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் கோருகிறோம். அதானி கைது செய்யப்பட வேண்டும். ஆனால், பிரதமர் அவரை பாதுகாத்து வருவதால், கைது செய்யப்பட மாட்டார்.

தற்போது கேள்வி என்னவென்றால், அதானி ஏன் சிறையில் இல்லை? இந்தியாவில் லஞ்சம் கொடுத்து குற்றம் செய்துள்ளார். மின்சாரத்தை அதிக விலைக்கு விற்றுள்லார் என்று அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், பிரதமர் எதுவும் செய்யவில்லை, அவரால் எதுவும் செய்ய முடியாது. அதானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர் ஏதாவது செய்ய நினைத்தாலும் முடியாது. ரூ. 2000 கோடி ஊழல் செய்துள்ளார் அதானி. ஆனால், பிரதமருக்கு தொடர்பு இருப்பதால் கைது செய்யப்படமாட்டார், விசாரணையை கூட எதிர்கொள்ள மாட்டார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதானி ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்படுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல், “எங்கெல்லாம் ஊழல் நடந்துள்ளதோ, அங்கெல்லாம் விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை அதானியில் இருந்து தொடங்க வேண்டும். அவர் கைது செய்யப்படாவிட்டால், விசாரணை நம்பத்தகுந்ததாக இருக்காது. எனவே, அதானியை கைது செய்து, விசாரித்து பின் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

விசாரணையின் முடிவில், நரேந்திர மோடியின் பெயர் வெளிவரும், ஏனென்றால் பாஜகவின் நிதி அமைப்பு முழுவதும் அவர் கையில்தான் உள்ளது. அதனால், பிரதமர் விரும்பினாலும், அவரால் எதுவும் செய்ய முடியாது. ஒருவகையில் அதானி நாட்டையே அபகரித்து விட்டார். இந்தியா அதானியின் பிடியில் சிக்கியுள்ளது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT