முசாஃபர்நகர்: பிகார் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற இந்திய ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது தொடர்பான தவறான தகவல்கள் பரவி வருவதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து பொருள்களை உள்ளூர் மக்கள் எடுப்பது போன்ற விடியோவை உண்மை அறியும் குழுக்கள் ஆராய்ந்து கொள்ளையடிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறது.
முன்னதாக, பிகாரில் வெள்ள நிவாரண பொருள்களுடன் சென்ற இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வெள்ளம் நிறைந்த பகுதியிலேயே ராணுவ ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் பலியானதாகவும், ஹெலிகாப்டரில் இருந்த மற்ற யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து நிவாரணப் பொருள்களை பிகார் மக்கள் கொள்ளையடித்துச் சென்றதாக சில விடியோக்கள் வெளியாகி வருகிறது. ஆனால், அவை உண்மையல்ல என்றும், உள்ளூர் மக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் சேர்ந்து, ஹெலிகாப்டருக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிகாரில், வெள்ள நிலைமை மோசமடைந்து வந்தாலும், ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருள்கள் மக்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்.
பிகாரில் கடுமையான வெள்ளம் சூழ்ந்திருப்பதால், மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் செல்ல முடியாத நிலையில், உள்ளூர் மக்கள்தான் வீரர்களை மீட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்திய ராணுவமும், ராணுவ ஹெலிகாப்டரில் கொள்ளை அடிக்கப்படவில்லை என்றும், கிராம மக்கள்தான் விரைந்து வந்து ஹெலிகாப்டரில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.