திரிபுரா மாநில எல்லைப் பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் ஊடுருவ முயன்றபோது எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதால் அந்தக் கும்பலில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திரிபுராவின் சல்போகர் எல்லைப் பகுதியில் நேற்று மாலை வங்கதேசத்திலிருந்து 12 முதல் 15 கடத்தல்காரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.
கடத்தல் பொருள்களை எடுத்துவந்த அவர்கள், கூர்மையான ஆயுதங்களையும் கையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களைக் கண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மற்ற வீரர்களையும் அழைத்துக் கொண்டு அவர்களைப் பிடிக்கச் சென்றார். அவர்களுக்கு அருகில் சென்றபோது வானத்தை நோக்கி சுட்டதும் கடத்தல்காரர்கள் சிலர் திரும்பவும் வங்கதேசத்துக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
இருப்பினும், மற்றவர்கள் இணைந்து ஆயுதங்களால் ஒரு வீரரை மட்டும் தாக்கியுள்ளனர்.
இதனால், அவர் பாதுகாப்புக்காக அவர்களை நோக்கி இருமுறை சுட்டதில் துப்பாக்கி குண்டு பட்டு அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். உடனடியாக மற்றவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் துப்பாக்கி சேதமடைந்து அவரது இடது கை, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.