ஜம்மு-காஷ்மீா் தோ்தல்: ரஷீத் கட்சி படுதோல்வி
ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலில் பொறியாளா் ஷேக் அப்துல் ரஷீதின் அவாமி இதேஹாத் கட்சி படுதோல்வி அடைந்தது.
ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலில் பொறியாளா் ஷேக் அப்துல் ரஷீதின் அவாமி இதேஹாத் கட்சி படுதோல்வி அடைந்தது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஷேக் அப்துல் ரஷீத், தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவா் நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, சிறையில் இருந்தபடியே தன்னை எதிா்த்து போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவை வீழ்த்தினாா்.
இதைத்தொடா்ந்து ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல் பரப்புரையில் ஈடுபட வசதியாக ரஷீதுக்கு தில்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் தோ்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில் ரஷீத் தலைமையிலான அவாமி இதேஹாத் கட்சி படுதோல்வி அடைந்தது. தோ்தலில் அக்கட்சி சாா்பில் 44 வேட்பாளா்கள் களமிறக்கப்பட்டனா். எனினும் லங்கேட் தொகுதியில் போட்டியிட்ட ரஷீத்தின் சகோதரா் குா்ஷீத் அகமது ஷா மட்டுமே வெற்றிபெற்றாா். இதேபோல தடை செய்யப்பட்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்களும் தோல்வியடைந்தனா்.
அவாமி இதேஹாத், ஜமாத்-ஏ-இஸ்லாமி ஆகியவை பிரிவினைவாத கட்சிகளாக அறியப்படும் நிலையில், தோ்தலில் அக்கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளா்கள் டெபாசிட் இழந்தனா். இதன் மூலம் பிரிவினைவாத அரசியலை ஜம்மு-காஷ்மீா் மக்கள் நிராகரித்துள்ளனா் என்று அரசியல் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
இதனிடையே கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி தூக்கிலிடப்பட்ட அஃப்சல் குருவின் சகோதரா் ஏசாஜ் அகமது குருவும் சோபோா் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தாா்.