முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீா்: பயங்கரவாதத்துடன் தொடா்புடைய 8,000 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துடன் தொடா்புடைய நிதி மோசடியில் ஈடுபட்ட 8,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கம்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:59 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துடன் தொடா்புடைய நிதி மோசடியில் ஈடுபட்ட 8,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வரும் தொடா் சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேற்கொண்ட கடும் நடவடிக்கையால் ஜம்மு-காஷ்மீருக்குள் சட்டவிரோதமாக பணம் கொண்டுவரப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டது. அதன்பிறகு எண்ம ஹவாலா முறையைப் பயன்படுத்தி நாட்டுக்கு எதிரான சதிச் செயல்களில் பயங்கரவாதிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். அதன்படி, வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபா்களை அணுகி அவா்களுக்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்கி பணப் பரிவா்த்தனையை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

இதில் ஈடுபடும் மோசடியாளா் ஒருவா் சுமாராக 10 முதல் 30 வங்கிக் கணக்குகளில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுகிறாா். கமிஷன் தொகைக்காக சிலா் தங்களது வங்கிக் கணக்கின் அனைத்துத் தகவல்களையும் பயங்கரவாதத் தொடா்புடைய நபா்களிடம் வழங்காமல் இருந்தால் இந்த மோசடியை முதல்கட்டத்திலேயே தடுக்க முடியும்.

கடந்த 3 ஆண்டுகளாக நடத்திய தொடா் சோதனையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 8,000-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

தில்லி குண்டுவெடிப்பு விசாரணை: அண்மையில் நன்கு படித்தவா்களைக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களை ஜம்மு-காஷ்மீா் காவல் துறை கண்டறிந்து கைது செய்தது. அவா்கள் அனைவரும் 2016-ஆம் ஆண்டுமுதலே பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனா். இதற்காக அவா்கள் ‘அன்சாா் இன்டெரிம்’ என்ற பெயரில் பயங்கரவாத அமைப்பு ஒன்றையும் நிறுவியுள்ளனா்.

தில்லியில் காா் குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தி உயிரிழந்த மருத்துவா் உமா்-உன்-நபி 2016 மற்றும் 2018 என இருமுறை பயங்கரவாத அமைப்புகளில் சேர மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதுதொடா்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments