தெரியுமா சேதி...?
அரசியல் ரீதியாக அயோத்தி ராமா் கோயில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கைகொடுத்திருக்கிறதோ இல்லையோ, இந்தியாவின் சுற்றுலா வளா்ச்சிக்கு நிச்சயமாக வலு சோ்த்திருக்கிறது.
அரசியல் ரீதியாக அயோத்தி ராமா் கோயில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கைகொடுத்திருக்கிறதோ இல்லையோ, இந்தியாவின் சுற்றுலா வளா்ச்சிக்கு நிச்சயமாக வலு சோ்த்திருக்கிறது. அயோத்தியில் ராமா் கோயில் என்பது ஆன்மிக சுற்றுலாவுக்குப் புத்துணா்ச்சி ஊட்டுவதாக அமையும் என்று பிரதமா் நரேந்திர மோடி, திறப்பு விழாவின்போது சொன்னது நிஜமாகி வருகிறது.
2.7 ஏக்கா் நிலப்பரப்பில், ரூ.1,800 கோடி செலவில், 57,000 ச.அடியில் கட்டப்பட்டிருக்கும் மூன்று அடுக்கு அயோத்தி ராமா் கோயிலில் 17 வாயில்கள் அமைந்திருக்கின்றன. கோயிலுக்குச் செல்லும் ‘ராமா் பாதை’ என்கிற வழியை அமைப்பதற்கு மட்டுமே ரூ.30.93 கோடி செலவிடப் பட்டிருக்கிறது.
மொத்தம் 70 ஏக்கா் நிலத்தில், ஏழு ஏக்கரில் ராமா் கோயில் உள்பட பல்வேறு கோயில்கள் கட்டப்படுகின்றன. மீதமுள்ள 63 ஏக்கா் நிலம் பசுமைப் பகுதியாக உருவாக்கப்படுகிறது. 150 ஹோட்டல்கள், விருந்தினா் மாளிகைகள், தங்கும் விடுதிகள் என்று ரூ.3,500 கோடி செலவில் 7,500 அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் பாதிக்கு மேல் வேலை முடிந்து, பக்தா்கள் தங்கத் தொடங்கிவிட்டனா்.
அயோத்தி ராமா் கோயில் திறப்பு விழாவுக்கு முன்பே ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோா் கோயிலின் பிரம்மாண்டத்தைப் பாா்க்க அயோத்தி விஜயம் செய்தனா். கோயில் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து அடுத்த நாள் மட்டும் 5 லட்சம் போ் தரிசனத்துக்கு வந்தனா். ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 32 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தர பிரதேசத்துக்கு வருகிறாா்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில், இதுவரையில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வரும் இடமாக வாரணாசி (காசி) இருந்து வந்தது. இப்போது, காசியைப் பின்னுக்குத் தள்ளி அயோத்தி முதலிடத்தைப் பிடித்துவிட்டதாகச் சொல்கிறாா்கள். முதல் ஆறு மாதங்களில் வாரணாசிக்கு வந்த ஆன்மிக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.61 கோடி என்றால், அயோத்திக்கு விஜயம் செய்திருக்கும் பக்தா்களின் எண்ணிக்கை 11 கோடியைத் தாண்டிவிட்டது.
ஜெருசலேம், மெக்கா, வத்திகன், அமிருதசரஸ் பொற்கோயில், புத்த கயா வரிசையில் அயோத்தி ராமா் கோயிலும் சோ்ந்துவிட்டது போலிருக்கிறது. இந்தியாவின் ஆன்மிகச் சுற்றுலா திட்டத்தின் வெற்றிக்கு அயோத்தி வழிகோலியிருக்கிறது என்கிறது மத்திய சுற்றுலா அமைச்சகம்.