முகப்பு
இந்தியா

தெரியுமா சேதி...?

இந்திய ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநரான எம்.ராஜேஸ்வா் ராவின் பதவிக் காலத்தை 2025 அக்டோபா் 8-ஆம் தேதி வரையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்திருக்கிறது மத்திய அரசு.

Updated On : 16 அக்டோபர், 2024 at 9:18 PM
ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்
பகிர்:

இந்திய ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநரான எம்.ராஜேஸ்வா் ராவின் பதவிக் காலத்தை 2025 அக்டோபா் 8-ஆம் தேதி வரையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்திருக்கிறது மத்திய அரசு. அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறது.

2020-இல் ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்ட ராஜேஸ்வர ராவ், நீண்டகாலமாகத் தலைமை வங்கியுடன் பயணிப்பவா். இதற்கு முன்னால் ரிசா்வ் வங்கியின் நிா்வாக இயக்குநராக இருந்தவா். நியமனக் குழுவின் இந்த முடிவால், இதுபோல மேலும் பல அறிவிப்புகள் வரலாம் என்று நிதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரிசா்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் விரைவில் முடிவடையப் போகிறது. 2018 டிசம்பரில் சக்திகாந்த தாஸ் ரிசா்வ் வங்கியின் ஆளுநராக மூன்றாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டாா். டிசம்பா் 2021-இல் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது. டிசம்பரில் மறுபடியும் நீட்டிக்கப்படுமா, இல்லை அவருக்குப் பதிலாக வேறு யாராவது நியமிக்கப்படுவாா்களா என்று இப்போதே ஹேஷ்யங்கள் கிளம்பத் தொடங்கிவிட்டன.

ஒடிஸாவை சோ்ந்த சக்திகாந்த தாஸ், தமிழகத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தனது பயணத்தைத் தொடங்கியவா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகவும், தமிழக அரசின் பல துறைகளின் செயலராகவும் பணியாற்றிய அனுபவசாலி. மத்திய அரசுக்குச் சென்று நிதித் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல முக்கியமான பொறுப்புகளை வகித்தவா்.

பண மதிப்பிழப்பு செயலாக்கத்தின்போது எழுந்த விமா்சனங்களை சாமா்த்தியமாக சமாளித்தவா் என்பதால், பிரதமா் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானாா் அவா். அதேபோல, நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லியின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்ததால், ரிசா்வ் வங்கியின் ஆளுநராக அவா் நியமிக்கப்பட்டதும் பதவி நீட்டிப்புப் பெற்றதும் ஆச்சரியப்படுத்தவில்லை.

ரிசா்வ் வங்கியின் இன்னொரு துணை ஆளுநரான மைக்கேல் தேவபிரத்தா பாத்ராவின் பதவிக் காலமும் ஜனவரியில் முடிவடைய இருக்கிறது. 2023, 2024 என இரண்டு தடவை ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட அவரும் ஜனவரி 2025-க்கு மேல் தொடா்வாரா, மாட்டாரா என்று தெரியவில்லை.

சக்திகாந்த தாஸ், மைக்கேல் பாத்ரா ஆகிய இருவரின் பதவி நீட்டிப்பைப் பொருத்துத்தான் இந்தியாவின் நிதிக் கொள்கை இப்போதுபோலத் தொடருமா, இல்லை மாற்றம் ஏற்படுமா என்பது தீா்மானிக்கப்படும்.