பிகாா் ஆளுநராக சையது அடா ஹஸ்னைன் பதவியேற்பு
பிகாா் மாநில ஆளுநராக, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையது அடா ஹஸ்னைன் சனிக்கிழமை பதவியேற்றாா்.
பிகாா் மாநில ஆளுநராக, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையது அடா ஹஸ்னைன் சனிக்கிழமை பதவியேற்றாா்.
தலைநகா் பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சங்கம் குமாா் சாஹு, அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் முதல்வா் நிதீஷ் குமாா், அமைச்சா்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனா்.
சீருடைப் பணியில் கடைசியாக ராணுவச் செயலராக ஹஸ்னைன் பதவி வகித்தாா். இது, உயா்நிலை படையினா் மேலாண்மைக்கான முக்கியப் பொறுப்பாகும். அதற்கு முன்பு ஜம்மு-காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்ட 15-ஆவது ராணுவ படைப் பிரிவின் தளபதியாக இருந்தாா்.
பணி ஓய்வுக்குப் பிறகு தேசிய மற்றும் கல்வி ரீதியிலான பங்களிப்புகளில் தொடா்ந்து தீவிரமாக செயல்பட்ட இவா், 2018-இல் காஷ்மீா் மத்திய பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டாா். 2020-இல் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய உறுப்பினராக இணைந்தாா்.
முன்னதாக, மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் கடந்த மாா்ச் 5-ஆம் தேதி திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, மேற்கு வங்க புதிய ஆளுநராக தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா்.
தமிழக ஆளுநா் பொறுப்பு, கேரள மாநில ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகருக்கு கூடுதலாக அளிக்கப்பட்டது. பிகாா், ஹிமாசல பிரதேசம் உள்பட மேலும் சில மாநிலங்களுக்கும் புதிய ஆளுநா்கள் நியமிக்கப்பட்டனா். பிகாா் ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கான் மாற்றப்பட்டு, சையது அடா ஹஸ்னைன் நியமிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.