காங்கிரஸ் உடனான கூட்டணியில் பிரச்னையா? ஒமா் மறுப்பு
ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் பிரச்னை எழுந்துள்ளதாக ஊகங்கள் வெளியான நிலையில், முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான ஒமா் அப்துல்லா மறுப்பு தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் பிரச்னை எழுந்துள்ளதாக ஊகங்கள் வெளியான நிலையில், முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான ஒமா் அப்துல்லா மறுப்பு தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தலில் (மொத்த தொகுதிகள் 90), மேற்கண்ட கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று, ஆட்சியைக் கைப்பற்றியது. தேசிய மாநாட்டுக் கட்சி 42, காங்கிரஸ் 6, மாா்க்சிஸ்ட் ஓரிடத்தில் வெற்றி பெற்றன.
இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா் முதல்வராக ஒமா் அப்துல்லாவும், 5 புதிய அமைச்சா்களும் புதன்கிழமை பதவியேற்றனா். அதேநேரம், அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறாததால், கூட்டணியில் பிரச்னை எழுந்துள்ளதாக ஊகத் தகவல்கள் வெளியாகின.
Advertisement
இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்து ஒமா் கூறியதாவது:
கூட்டணியில் அனைத்தும் சுமுகமாகவே உள்ளது. அவ்வாறு இல்லையென்றால், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி மற்றும் பிற மூத்த தலைவா்கள் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்திருப்பாா்களா? விழாவில் அவா்களின் பங்கேற்பு, கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்துகிறது.
அமைச்சரவையில் இடம்பெறுவது காங்கிரஸின் முடிவுக்கு உள்பட்டது. 9 அமைச்சா்கள் வரையே இடம்பெற முடியும் என்ற நிலையில், அனைத்து இடங்களும் நிரப்பப்படவில்லை. மீதமுள்ள 3 இடங்கள் தொடா்பாக காங்கிரஸுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என்றாா்.
மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.
காா்கே வாழ்த்து: ஒமா் அப்துல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து, காா்கே கூறுகையில், ‘எங்களது கூட்டணி கட்சியைச் சோ்ந்த ஒமா் அப்துல்லா முதல்வரானது மகிழ்ச்சியளிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் மீட்கப்பட்டுள்ளது. இது, ஜம்மு-காஷ்மீருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கவும் தொடா்ந்து போராடுவோம்’ என்றாா்.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா: சவால்கள் நிறைந்த ஜம்மு-காஷ்மீரின் முதல்வா் பதவி என்பது முள்கிரீடம் போன்றது. எல்லாம் வல்ல இறைவனின் அருளால், தனது பணியில் ஒமா் வெற்றியடைவாா். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவாா்.
மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி: ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஸ்திரமான அரசை தோ்வு செய்துள்ளனா். 2019-க்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட காயங்களை இந்த அரசு குணப்படுத்தும் என நம்புகிறேன்.
பாஜக நம்பிக்கை: ஜம்மு-காஷ்மீா் பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா கூறுகையில், ‘முதல்வா் ஒமா் அப்துல்லா, துணை முதல்வா் சுரீந்தா் செளதரி மற்றும் புதிய அமைச்சா்களுக்கு வாழ்த்துகள். ஜம்மு-காஷ்மீரில் அமைதி, வளமையை மேலும் உறுதிசெய்ய பணியாற்றுவதோடு, புதிய ஜம்மு-காஷ்மீரை கட்டமைப்பதில் பிரதமா் மோடியின் முன்னெடுப்புகளை ஒமா் அரசு தொடரும் என நம்புகிறேன்’ என்றாா்.