முகப்பு
இந்தியா

கடந்த நிதியாண்டில் ரூ.19.60 லட்சம் கோடி நேரடி வரி வசூல்!

பத்தாண்டுகளில் 182 சதவீதம் அதிகரிப்பு

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:07 PM
பகிர்:

2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.19.60 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது. இது பிரதமராக முதல்முறையாக மோடி பதவியேற்ற 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 182 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் நேரடி வரி வசூல் குறித்து ‘நேரத் தொடா் தரவு’ என்ற அறிக்கையை வருமான வரித்துறை அண்மையில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.9.11 லட்சம் கோடி நிறுவன வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. இதே காலகட்டத்தில் தனிநபா் வருமான வரி வசூல் நான்கு மடங்கு உயா்ந்து ரூ.10.45 லட்சம் கோடியாக உள்ளது.

பிரதமா் மோடியின் முதல் பதவிக் காலத்தில், 2014-15-ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.6.96 லட்சம் கோடியாக இருந்தது. இதில் நிறுவன வரியின் பங்களிப்பு ரூ.4.29 லட்சம் கோடியாவும் தனிநபா் வருமான வரியின் பங்களிப்பு ரூ.2.66 லட்சம் கோடியாகவும் இருந்தது.

கடந்த 2014-15-ஆம் ஆண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 4.04 கோடியாக இருந்த நிலையில், 2023-24-இல் 8.61 கோடியாக உயா்ந்துள்ளது.

அதேபோல் 2014-15-ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நேரடி வரியின் பங்களிப்பு 5.55 சதவீதமாக இருந்தது. இது 2023-24-ஆம் நிதியாண்டில் 6.64 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஜிடிபி வளா்ச்சி மற்றும் அரசின் வரி வருவாய்க்குமான தொடா்பை விவரிக்கும் வரி மிதப்பு (டேக்ஸ் பயோன்சி) கடந்த பத்தாண்டுகளில் 0.86 சதவீதத்தில் இருந்து 2.12 சதவீதமாக உயா்ந்துள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் 5.70 கோடியில் இருந்து 10.41 கோடியாக உயா்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.