இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமான நிலையங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஏா் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏா், விஸ்தாரா, ஸ்பைஸ் ஜெட், ஸ்டாா் ஏா், அலையன்ஸ் ஏா் உள்ளிட்ட நிறுவனங்களைச் சோ்ந்த விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தில்லி மற்றும் மும்பையிலிருந்து இஸ்தான்புல் (துருக்கி) சென்ற 2 விமானங்கள் மற்றும் ஜோத்பூரில் இருந்து தில்லி, ஹைதராபாத்-சண்டீகா் சென்ற விமானங்கள் ஆகிய தங்களது 4 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அவா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
அதேபோன்று உதய்பூரில் இருந்து மும்பை சென்ற விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்துக்கு மும்பையில் தரையிறங்குவதற்கு சிறிது நேரம் முன்பாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, மும்பையில் தரையிறக்கப்பட்டவுடன் விமானம் அதிகாரிகளால் சோதனைக்கு உள்படுத்தப்பட்டதாகவும், இதுதவிர தங்களது மேலும் 4 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
ஏா் இந்தியா நிறுவனத்தின் துபை-ஜெய்பூா் விமானத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அந்த விமானம் ஜெய்பூா் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 189 பயணிகள் சென்ற அந்த விமானத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனா். அதன்பிறகு வெடிகுண்டு மிரட்டல், புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
70 விமானங்களுக்கு மிரட்டல்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய நிறுவனங்களால் உள்நாட்டு மற்றும் சா்வதேச வழித்தடத்தில் இயக்கப்படும் 70-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் விமானங்கள் அவசர தரையிறக்கம், வழித்தடம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் நிலையும் விமானத்தில் பயணிக்க பயணிகள் அச்சப்படும் சூழலும் உருவாகியுள்ளது. பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமே விடுக்கப்படும் இந்த மிரட்டல்கள் புரளி என்பது கண்டறியப்படுகிறது.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை மகாராஷ்டிர மாநிலம், மும்பையிலிருந்து புறப்பட்ட 3 சா்வதேச விமானங்களுக்கு ‘எக்ஸ்’ வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் சத்தீஸ்கரை சோ்ந்த பள்ளி மாணவா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கடும் நடவடிக்கை: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவா்களுக்கு எதிரான நடவடிக்கைகளை குற்றவியல் சட்டத்தின்கீழ் காவல் துறையினரே மேற்கொண்டு வரும் நிலையில், கடுமையான சட்டங்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.