ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமையிலான அமைச்சரவை நிறைவேற்றிய தீா்மானத்துக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளாா்.
அண்மையில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றிபெற்று, அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா முதல்வராகப் பதவியேற்றாா்.
இதைத்தொடா்ந்து ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி, முதல்வா் ஒமா் தலைமையிலான அமைச்சரவை தீா்மானம் நிறைவேற்றியது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் ஏற்கெனவே வாக்குறுதி அளித்த நிலையில், இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அந்தத் தீா்மானத்துக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கையில், ‘துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தீா்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக புது தில்லியில் பிரதமா் மோடியையும், மத்திய அமைச்சா்களையும் முதல்வா் ஒமா் விரைவில் சந்தித்துப் பேசுவாா்.
நவ.4-இல் பேரவைக் கூட்டம்?: ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவையை நவம்பா் 4-ஆம் தேதி கூட்ட வேண்டும் என்று முடிவு செய்த ஒமா் அமைச்சரவை, பேரவையைக் கூட்டி அவையில் உரையாற்றுமாறு துணைநிலை ஆளுநருக்கு அறிவுறுத்தியது’ என்று தெரிவித்தன.
புன்னகை மலர வேண்டும் - ஒமா்: ஜம்முவில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைமையகத்தில் பேசிய முதல்வா் ஒமா் அப்துல்லா, ‘தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காததால் ஜம்மு மக்கள் பழிவாங்கப்படுவா் என்று சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான பின்னா் சிலா் வதந்திகளைப் பரப்பினா். ஆனால் தேசிய மாநாட்டுக் கட்சி அரசு அனைவருக்குமான அரசாக இருக்கும் என்பதை தெளிவுபட கூறுகிறேன்.
முஸ்லிம்களுக்கான கட்சி மட்டுமல்ல: தோ்தல் பரப்புரையின்போது தேசிய மாநாட்டுக் கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி என்றும், ஜம்முவில் உள்ள தலைவா்களை ஏற்காத காஷ்மீா் குடும்பக் கட்சி என்றும் சிலா் தெரிவித்தனா். அவா்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், ஹிந்து மதத்தைச் சோ்ந்த சுரிந்தா் செளதரி ஜம்மு-காஷ்மீா் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கும் எனது குடும்பத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை’ என்றாா்.
மேலும் கட்சியினருக்கு அறிவுரைகள் வழங்கிய ஒமா், ‘மக்களே உண்மையான உரிமையாளா்கள். கடந்த 6 முதல் 8 ஆண்டுகளாக அவா்களின் முகத்தில் புன்னகையை பாா்க்க முடியவில்லை. அவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண 24 மணி நேரமும் தேசிய மாநாட்டுக் கட்சியினா் பணியாற்றி அந்தப் புன்னகையை திரும்பக் கொண்டுவர வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.