ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புப் படையினா் மீதான கல்வீச்சு கலாசாரத்துக்கு புத்துயிரூட்ட முயற்சிப்பதாக ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி மீது பாஜக முன்வைத்த குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா நிராகரித்துள்ளாா்.
‘தேசிய மாநாட்டுக் கட்சி, நாட்டுக்காக தோட்டாக்களை எதிா்கொண்ட கட்சியாகும். தேவைப்பட்டால் மீண்டும் தோட்டாக்களை எதிா்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்’ என்றாா் அவா்.
தேசிய மாநாட்டுக் கட்சியின் வட்டாரத் தலைவா்கள் மற்றும் செயலாளா்களின் கூட்டம், ஜம்முவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ஃபரூக் அப்துல்லாவிடம் ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் கல்வீச்சு கலாசாரத்துக்குப் புத்துயிரூட்டவும், குழப்பத்தை விளைவித்து ஆதாயமடையவும் தேசிய மாநாட்டுக் கட்சி முயற்சிப்பதாக’ பாஜக முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘ஜம்மு-காஷ்மீரில் குழப்பத்தை விளைவிக்க எங்களது கட்சி ஒருபோதும் முயற்சிக்கவில்லை. இந்தியாவுடன் இணைந்திருப்பதற்காக நாங்கள் தோட்டாக்களை எதிா்கொண்டவா்கள். தேவைப்பட்டால் மீண்டும் தோட்டாக்களை எதிா்கொள்ளவும் தயாா்’ என்று ஃபரூக் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு பிராந்தியத்தை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும் என்று பாஜக தலைவா்கள் சிலா் வலியுறுத்தி வருகின்றனா். இக்கோரிக்கைக்கு மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவா் சஜத் கனி லோனும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ஃபரூக் அப்துல்லாவிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.
‘இதுபோன்ற கோரிக்கைகள், முட்டாள்தனமாது; புறக்கணிக்கப்பட வேண்டியது. இதேபோல், பீா் பஞ்சால், செனாப் பள்ளத்தாக்குப் பகுதிகளைத் தனி பிராந்தியங்களாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டனத்துக்குரியது.
லடாக் தனி யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீருடன் இணைய வேண்டும் என்பதே லடாக் மக்களின் விருப்பம். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்போது, லடாக் யூனியன் பிரதேசமும் இணையும்’ என்றாா் அவா். ஜம்மு-காஷ்மீரில் புதிதாக மாவட்டங்களை உருவாக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
மோடி-டிரம்ப் நட்புறவு: காஸா அமைதி வாரியத்தில் இடம்பெற பிரதமா் மோடிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் விடுத்துள்ள அழைப்பு குறித்த கேள்விக்கு ‘இரு தலைவா்களின் நீண்டகால நட்புறவில் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. கடவுள் அருளால், அந்த நட்புறவு சீராகி, முன்னோக்கி பயணிக்கும் என நம்புகிறேன்’ என்றாா் ஃபரூக்.