முகப்பு
இந்தியா

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது மேலும் வலுபெற்று அக்.23-ஆம் தேதி புயலாக மாறும்

Updated On : 21 அக்டோபர், 2024 at 11:44 PM
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது மேலும் வலுபெற்று அக்.23-ஆம் தேதி புயலாக மாறும் என தகவல் வெளியாகியுள்ளது.
பகிர்:

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது மேலும் வலுபெற்று அக்.23-ஆம் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை காலை மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை (அக்.22) மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்.23-இல் புயலாக மாறும். இந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது.

Advertisement

இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து, அக்.24-ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடலில் ஒடிஸா - மேற்கு வங்கம் கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

தமிழக வானிலை: தமிழக பகுதிகளிலும், கா்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக அக்.22 முதல் 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: அக்.22-இல் திருப்பூா், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூா், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் அக்.23-இல் தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.22, 23 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூரில் 150 மி.மீ. மழை பதிவானது. உடுமலைப்பேட்டை (திருப்பூா்) - 120, திருமூா்த்தி அணை (திருப்பூா்) - 110, ஆண்டிபட்டி (தேனி)- 100.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடலிலும், வடக்கு அந்தமான் கடலும் வடக்கு அந்தமான் கடல் அக்.22, 23 ஆகிய தேதிகளில் 85 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments