திரிஷ்யம் பட பாணியில் பெண்ணை கொலை செய்து சிமென்ட் தளத்தின்கீழ் புதைத்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணுவவீரர்
ராணுவ வீரரான அஜய் வான்கடே(33) மற்றும் ஜியோட்ஸ்னா ஆக்ரே (32) இருவரும் திருமண தகவல் மைய செயலியின் மூலம் அறிமுகமாகியுள்ளனர். அதன்பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரின் காதலுக்கும் அஜய் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறொரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர்.
நாகலாந்தில் ராணுவ வீரராக பணியாற்றிவரும் அஜய் வான்கடே நாக்பூரில் உள்ள கைலாஷ் நகரில் வசித்துவருகிறார். ஜியோட்ஸ்னா ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து ஆனவர் என்று அவரது தோழி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இருவரும் திருமண தகவல் தொடர்பு செயலி மூலம் நட்பாக பழகி வந்துள்ளனர்.
பிரச்னை
அஜய்க்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்ததும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகு ஜியோட்ஸ்னாவிடம் பேசுவதை அஜய் தவிர்த்து வந்துள்ளார்.
அதன்பின்னர் நிலைமை மோசமடைய ஜியோட்ஸ்னாவை கொலை செய்யவும் முடிவெடுத்த அஜய், ஜியோட்ஸ்னாவிடம் இருந்துவரும் ஃபோன் கால்களையும் தவிர்த்து வந்துள்ளார்.
இதனால், கோபமடைந்த அஜய் தனது தாயாரின் செல்ஃபோன் மூலம் ஜியோட்ஸ்னாவுக்கு தொடர்பு கொண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி வர்தா சாலையில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.
ஜியோட்ஸ்னா, தான் ஒரு ஆட்டோ மொபைல்ஸ் கடையில் வேலை பார்ப்பதால், தனது நண்பரைச் சந்திக்கப் போவதாகவும் ஒருநாள் கழித்து வருவதாகவும் அவரது பெற்றோரிடம் கூறிவிட்டு அஜய்யைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
உடல் புதைப்பு
அதன்பின்னர் வர்தா சாலையில் சந்தித்த இருவரும் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். அடுத்து இருவரும் சேர்ந்து தங்களது காரில் சென்று அருகில் உள்ள மதுபானக் கூடத்திற்குச் சென்று அதிகளவில் மது அருந்தியுள்ளனர். அஜய் ஜியோட்ஸ்னாவுக்கு தெரியாமல் அவருக்கு மயக்க மருந்து கலந்த மதுவை கொடுத்துள்ளார்.
மது அருந்திய ஜியோட்ஸ்னா தனது சுய நினைவை இழந்துள்ளார். அவரை காரில் ஏற்றிக்கொண்டு யாரும் இல்லாத ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்துக்கு இரவில் சென்ற அஜய் அங்கு ஒரு குழி தோண்டி அவரது உடலைப் புதைத்துள்ளார்.
ஜியோட்ஸ்னாவைப் புதைத்த இடத்தில் சிமென்ட் கொண்டு மூடியுள்ளார். பின்னர் அவரது செல்ஃபோனை வர்தா சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் போட்டுள்ளார்.
வழக்குப்பதிவு
ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஜியோட்ஸ்னா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பெல்ட்ரோடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 17 ஆம் தேதி அவர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜியோட்ஸ்னாவின் அழைப்புகளை ஆய்வு செய்த காவல்துறையினர் அஜய்யை விசாரணைக்கு அழைத்துள்ளனர். பிரச்னை உணர்ந்த அஜய், அதில் இருந்து தப்பிப்பதற்காக உயர் ரத்த அழுத்தம் காரணமாக புணேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
கைது
கைது செய்வதில் இருந்து தப்பிக்க அஜய் முயன்றபோதிலும் அவரது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் காவல் துறையினரின் பிடியில் சிக்கினார்.
ஜியோட்ஸ்னாவின் உடலைப் புதைத்ததை ஒப்புக்கொண்ட அஜய், அந்த இடத்தையும் காவல்துறையினருக்கு காட்டியுள்ளார். அதன்படி தடயவியல் நிபுணர்கள் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரிஷ்யம் பட பாணியில்...
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் பட பாணியில் கொலை நடந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திரிஷ்யம் படத்தின் மறு உருவாக்கமான பாபநாசம் படம் கமல்ஹாசன் நடிப்பில் தமிழிலும், அஜய் தேவ்கன் நடிப்பில் ஹிந்தியிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.