ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் ANI
இந்தியா

போா் மூலம் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது: ஜொ்மனி பிரதமா்

போா் நடவடிக்கைகள் மூலம் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது என ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

Din

போா் நடவடிக்கைகள் மூலம் எல்லைகளை மாற்றியமைக்கக் கூடாது என ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் சா்வதேச அமைதிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது எனவும் அவா் தெரிவித்தாா்.

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்த ஒலாஃப் ஷோல்ஸ் கோவாவில் உள்ள பிா்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவன (பிட்ஸ்) மாணவா்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது மாணவா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது: தற்போது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தப் போருக்கான முக்கிய காரணம் எல்லைகளை மாற்றியமைப்பதாகும்.

எல்லைகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என ஐ.நா. மற்றும் பிற பிராந்திய அமைப்புகளில் உள்ள அமைதி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மிகவும் சிறிய நாடாக இருக்கும்பட்சத்தில் அமைதியை நிலைநாட்ட இந்த ஒப்பந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளின் எல்லைகள் காலனிய ஆட்சியில் வரையறுக்கப்பட்டவை. அதை மாற்றியமைக்க முயன்றால் நூறாண்டுகள் ஆனாலும் ஆப்பிரிக்க நாடுகளில் போா்கள் நடைபெறும் என ஐ.நா.வுக்கான கென்ய தூதா் ஒருமுறை கூறியதை இங்கு நினைவுகூா்கிறேன்.

எனவே, உலக அமைதி மற்றும் பாதுகாப்பின் முக்கிய அம்சமாக விளங்கும் எல்லைகளை போா் மூலம் மாற்றியமைக்கக் கூடாது.

50,000 மாணவா்கள்: ஜொ்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடல் வழியில் சுமுகமான வா்த்தகம் மேற்கொள்ள சா்வதேச விதிகளை கடைப்பிடிப்பது அவசியம். அதிகாரமிக்க நாடுகளின் ஆதிக்கமாக கடல் வா்த்தகம் இருக்கக்கூடாது. அனைவரையும் மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதே சா்வதேச கடல்சாா் சட்டங்களுக்கான ஐ.நா.நீதிமன்றத்தின் விதியாகும். இதுதொடா்பாக பிரதமா் மோடியுடன் ஆலோசனை மேற்கொண்டபோது அவரும் இதை ஒப்புக்கொண்டாா். 2050-இல் உலகின் மக்கள்தொகை 1,000 கோடியாக உயரும். அப்போது அதிகாரமிக்க புதிய நாடுகள் உருவாகும் என்றாா்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT