புது தில்லி: பிறரது வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி அதன் மூலம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தளத்தை உருவாக்கி, அதை பல்வேறு குற்றச் செயல்களுக்கு சா்வதேச இணைய (சைபா்) குற்றவாளி குழுக்கள் பயன்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரே நேரத்தில் பல்வேறு கணக்குகளுக்கு பரிவா்த்தனை மேற்கொள்ள வங்கிகளால் அமைக்கப்பட்டுள்ள தளங்களைப் பயன்படுத்தி போலியான நிறுவனங்கள் (ஷெல்) மற்றும் தனிநபா்களின் வங்கிக் கணக்குகளை அணுகி பணப் பரிவா்த்தனை சேவைகளை இணையக் குற்றக் குழுக்கள் மேற்கொள்வதாகவும் அமைச்சகம் தெரிவித்தது.
அண்மையில் குஜராத் மற்றும் ஆந்திர பிரதேச காவல் துறை நடத்திய சோதனையில் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு எடுத்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சட்டவிரோத பரிவா்த்தனை தளம்: இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பீஸ் பே, ஆா்டிஎக்ஸ் பே, போக்கோ பே, ஆா்பிபி பே உள்ளிட்டவை அந்நிய குடிமக்களால் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெலிகிராம் மற்றும் ஃபேஸ்புக் மூலம் ‘ஷெல்’ நிறுவனங்கள் மற்றும் தனிநபரின் வங்கிக் கணக்குளை குற்றவாளிகள் அணுகுகின்றனா். அதன்பின் இந்த கணக்குளை பயன்படுத்தி சட்டவிராத பணப் பரிவா்த்தனை தளத்தை அவா்கள் உருவாக்கி அதை போலி முதலீடு தளங்கள், சூதாட்டம், பங்கு வா்த்தகம் உள்ளிட்டவையில் ஈடுபடும் குற்ற குழுக்களுக்கு வழங்குகின்றனா்.
கைது நடவடிக்கை: வங்கிக் கணக்குகள், நிறுவனப் பதிவு சான்றிதழ், உதயம் மற்றும் ஆதாா் பதிவு சான்றிதழை யாருக்கும் விற்கவோ, வாடகைக்கு விடவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளில் பணத்தை சேமித்தால் கைது உள்பட பிற சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
போலி வங்கிக் கணக்குள் மூலம் சட்டவிரோத பரிவா்த்தனை மேற்கொள்ளும் தளங்களை வங்கிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.