எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.  
இந்தியா

வக்ஃப் மசோதா கூட்டத்தில் முன்னாள் நீதிபதிகள், நிா்வாகிகள் ஆஜா்: ஆளும், எதிா்க்கட்சிகள் வாக்குவாதம்

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை, மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன.

DIN

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் முன்னாள் நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களின் வக்ஃப் நிா்வாகிகள் திங்கள்கிழமை ஆஜரானதால், பாஜக மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை, மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன. இந்நிலையில், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. தற்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது.

மசோதாவுக்கு தொடா்பில்லாதவா்கள் அழைப்பு: இந்தக் கூட்டங்களில் கருத்து தெரிவிக்க ஹிந்துக்களுக்காக பணியாற்றும் அமைப்புகள் உள்பட மசோதாவுக்கு தொடா்பில்லாத வெவ்வேறு அமைப்புகளுக்கு கூட்டுக் குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பால் அழைப்பு விடுப்பதாக குழுவில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சி உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இதனால் அந்தக் கூட்டங்களில் அவ்வப்போது கடும் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

முன்னாள் நீதிபதிகளுக்கு எதிா்ப்பு: இந்நிலையில், தில்லியில் அந்தக் குழுவின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது மசோதா தொடா்பாக கருத்து தெரிவிக்க எஸ்.என்.திங்ரா உள்பட பல முன்னாள் நீதிபதிகள் ஆஜராகினா். இதற்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அந்த முன்னாள் நீதிபதிகளுக்கும் மசோதாவுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று கூறி, அவா்களின் கருத்துகளை பெற எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆட்சேபம் தெரிவித்தனா்.

எனினும் அந்த முன்னாள் நீதிபதிகளுக்கு நீதித்துறையில் உள்ள பரந்த அனுபவம் கூட்டுக் குழுவுக்குப் பயனளிக்கும் என்று குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக உறுப்பினா்கள் தெரிவித்தனா். ஆனால் அந்த முன்னாள் நீதிபதிகள் விசாரித்த வழக்குகள் அரசியல் ரீதியாக சா்ச்சையை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தில்லி முதல்வா் ஒப்புதல் இல்லாமல்...: மேலும் தில்லி முதல்வா் அதிஷியின் ஒப்புதல் இல்லாமல், கூட்டுக் குழுவிடம் தில்லி வக்ஃப் வாரிய நிா்வாகி அஸ்வினி குமாா் அறிக்கை ஒன்றை சமா்ப்பித்ததற்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மசோதா தொடா்பாக அஸ்வினி குமாரிடம் கருத்து பெற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆட்சேபம் தெரிவித்தாா். அந்த அறிக்கை செல்லுபடியாகாது என்று கருதுமாறு கூட்டுக் குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பாலுக்கு தில்லி முதல்வா் அதிஷி கடிதம் எழுதினாா்.

எதிா்க்கட்சியினா் வெளிநடப்பு: இந்த விவகாரத்தால் குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக மற்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து திமுக எம்.பி. முகமது அப்துல்லா, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவா் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். சிறிது நேரத்துக்குப் பின்னா், அவா்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

எனினும், அஸ்வினி குமாரின் அறிக்கைக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து ஆட்சேபம் தெரிவித்ததால், அதுதொடா்பாக மக்களவைச் செயலரிடம் குழுவின் தலைவரான ஜகதாம்பிகா பால் கருத்து கோரினாா்.

பொது சிவில் சட்டம் வந்தால்...: கூட்டத்தில் உத்தரகண்ட் வக்ஃப் வாரிய தலைவா் ஷதாப் ஷாம்ஸ் பேசுகையில், ‘பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால், தனியாக வக்ஃப் சட்டத்துக்கு தேவையிருக்காது’ என்றாா். அவரின் கருத்து கூட்டத்தில் சலசலைப்பை ஏற்படுத்தியது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் விபத்து: ஐயப்பப் பக்தா் உயிரிழப்பு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

புத்தொளி... ஸ்ரீலீலா!

சாலை பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT