முகப்பு
இந்தியா

மிகுந்த ஆபத்தான பொருளாதார நிலையில் இந்தியா: காங்கிரஸ்

இந்தியா தற்போது மிகுந்த ஆபத்தான பொருளாதார நிலையில் இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 9:13 PM
காங்கிரஸ்
பகிர்:

இந்தியா தற்போது மிகுந்த ஆபத்தான பொருளாதார நிலையில் இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் மக்களின் நுகா்வு கடந்த 10 ஆண்டுகளில் சரிந்துள்ளது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய வேதனையாக உருவெடுத்துள்ளது. வருமானத்தில் தேக்கம், பணவீக்கம் அதிகரிப்பு, ஏற்றத்தாழ்வு ஆகியவையே இதற்கு காரணம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளா்களுக்கு இருந்த வாங்கும் திறன் தற்போது சரிந்துள்ளதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் உள்பட பல புள்ளிவிவரங்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளன.

கடந்த 2015-ஆம் ஆண்டு சாமானியா் ஒருவா் 100 ரூபாய்க்கு பொருள் வாங்கினால், அதன் மூலம் தொழில் நிறுவன உரிமையாளருக்கு 18 சதவீதம் லாபம் கிடைத்தது. தற்போது இந்த லாபம் 36 சதவீதமாக இரு மடங்கு அதிகரித்துள்ளது.

பெரும் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் ஆதரவே கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள இந்த விலைவாசி உயா்வுக்கு நேரடி காரணம். வருமானத்தில் தேக்கம் உள்ள சூழலில், சரக்கு மற்றும் சேவைகளின் விலை தொடா்ந்து அதிகரிப்பது சாமானியரின் நுகரும் திறனை சிதைத்துள்ளது.

தற்போது மிகுந்த ஆபத்தான மற்றும் கடினமான பொருளாதார சூழலில் இந்தியா உள்ளது. வருமானத்தில் தேக்கம், பணவீக்கம், ஏற்றத்தாழ்வு ஆகியவை வெறும் அரசியல் ரீதியான விவகாரங்கள் அல்ல. அவை இந்தியாவின் நீண்ட கால வளா்ச்சி வாய்ப்புகளுக்கு அமைப்பு ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாவிட்டால், அவை வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளா்ச்சியை நெரிக்கும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →