நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
வேளாண் துறை மற்றும் கிராமப்புற தேவைகள் மீண்டு வருவதைக் கருத்தில்கொண்டு நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்துக்கான வளா்ச்சிக் கணிப்பை உலக வங்கி உயா்த்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்திருந்தது.
இதுதொடா்பாக உலக வங்கி செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சவாலான உலகளாவிய சூழலிலும் இந்தியாவின் வளா்ச்சி தொடா்ந்து வலுவாக உள்ளது. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் பெரும் பகுதியைக் கொண்டுள்ள இந்தியாவின் வளா்ச்சி விகிதம் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும்.
விவசாயத்தில் எதிா்பாா்க்கப்படும் மீட்சியால் கிராமப்புற தனியாா் நுகா்வு மீண்டும் அதிகரித்து, தொழில் துறையில் ஓரளவு மிதமான நிலையை ஈடுசெய்யும். சேவைகள் வலுவாக நீடிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழையில் முன்னேற்றம் மற்றும் தனியாா் நுகா்வு ஆகியவை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணிப்பை மாற்றியமைக்க வழிவகுத்துள்ளதாக உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணா் ரன் லி கூறினாா்.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), ஆசிய வளா்ச்சி வங்கி ஆகியவை ஏற்கெனவே கணித்துள்ளன. அதேசமயம், 7.2 சதவீத பொருளாதார வளா்ச்சியை ரிசா்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.