நேரடி பணி நியமன முறையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளதால், மத்திய அமைச்சகங்களில் உள்ள 5 முக்கிய பதவிகள் இந்த மாதத்துடன் காலியாகவுள்ளது.
மேலும், பதவிக் காலம் முடிவடையும் அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு அல்லது புதிய அதிகாரிகளை நேரடி நியமனம் மூலம் நியமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
காலியாகும் பதவிகள்
நேரடி நியமனம் மூலம் நிதி அமைச்சகம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்துக்கு இணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் வருகின்ற செப். 11 முதல் 22-க்குள் முடிவடைகிறது.
2018ஆம் ஆண்டு, நேரடி பணி நியமன திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு, 10 இணைச் செயலாளர்கள் பணியிடங்களை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் 9 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 8 பேர் பணியில் சேர்ந்தனர். அவர்களில் 5 பேரின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
மொத்தம் 3 ஆண்டுகள் பதவிக் காலம் என்ற நிலையில், இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்க விதிகளில் இடம் உள்ளது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையால் நேரடி பணி நியமனம் நடைபெறும் நிலையில், பதவிக் காலம் முடிவடைந்த 5 பேருக்கு பதவி நீட்டிப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விரைவில் திருத்தப்பட்ட நேரடி நியமன திட்டம்
நேரடி பணி நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனத்தை தொடர்ந்து, அந்த முறையை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.
மேலும், நேரடி பணி நியமன திட்டத்தில் இடஒதுக்கீடு உள்ளிட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான வருகின்ற 17-ஆம் தேதி, திருத்தப்பட்ட நேரடி பணி நியமன திட்டத்துக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.