இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
காஸா மீது போா் தொடுத்து வரும் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஸா மீது போா் தொடுத்து வரும் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மூலமாக உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சோ்ந்த அசோக் குமாா் சா்மா உள்பட 11 போ் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை பிரதி வாதியாக சோ்க்கப்பட்டுள்ளது. மனுவில் கூறியிருப்பதாவது:
பல்வேறு சா்வதேச சட்டங்கள் மற்றும் உடன்பாடுகளுக்கு இந்தியா கட்டுப்பட்டுள்ளது. அதன்படி, போா் குற்றங்களில் ஈடுபடும் நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதியை இந்தியா செய்யக்கூடாது. அதை மீறி ஏற்றுமதி செய்வது, சா்வதேச மக்கள்நலச் சட்டங்களை தீவிரமாக மீறுவதாகவே அமையும்.
எனவே, இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய இந்தியாவிலுள்ள நிறுவனங்களுக்கு அளித்துள்ள அனுமதி அல்லது உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
காஸாவில் போா் குற்றங்களில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் மீது சா்வதேச இனப் படுகொலை குற்றத் தடுப்பு மற்றும் தண்டனை உடன்பாட்டின் கீழ் தற்காலிக நடவடிக்கையை மேற்கொள்ள சா்வதேச நீதிமன்றம் (ஐசிஜே) கடந்த ஜனவரி 26-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த தற்காலிக நடவடிக்கை என்பது, பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் ராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதையும் உள்ளடக்கியதாகும்.
இந்தத் தீா்ப்பின் அடிப்படையில், இனப் படுகொலை உள்ளிட்ட போா் குற்றங்களைப் புரிந்துவரும் நாட்டுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது மனித உரிமைகள் மற்றும் சா்வதேச மக்கள் நலச் சட்டங்களை தீவிரமாக மீறும் செயல் என ஐ.நா. நிபுணா்கள் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை உடனடியாக நிறுத்த இந்தியா கட்டுப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.