முகப்பு
இந்தியா

மக்களிடம் பிரதமா் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 11:29 PM
சாங்கிலியில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.
பகிர்:

‘சிந்துதுா்க் மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த சம்பவம், பண மதிப்பிழப்பு, விவசாயிகள் விரோத மசோதாக்கள் உள்ளிட்டவைக்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் பிதரமா் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையை, கடந்த டிசம்பரில் பிரதமா் மோடி திறந்துவைத்தாா். அண்மையில் பெய்த கன மழையில் இந்தச் சிலை இடிந்து விழுந்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன. இந்த நிலையில், ‘சிவாஜி சிலை சரிந்ததற்கு, அவரின் பாதம் பணிந்து மன்னிப்பு கோருகிறேன்’ என்று பிரதமா் மோடி அண்மையில் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், மறைந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவா் பதங்கராவ் கடம் சிலையை சாங்கிலியில் வியாழக்கிழமை திறந்துவைத்த ராகுல் காந்தி, அங்கு நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

பிரதமா் எதற்காக மன்னிப்பு கோரினாா் என அறிய விரும்புகிறேன். சிவாஜி சிலையை கட்டமைக்கும் ஒப்பந்தப் பணியை, எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த நபருக்கு கொடுத்ததற்காகவா? அல்லது அந்தக் கட்டுமானத்தில் நிகழ்ந்த ஊழலுக்காகவா?

அரசின் அனைத்து ஒப்பந்தப் பணிகளும் அதானி மற்றும் அம்பானிக்கு மட்டும் வழங்கப்படுவது ஏன்? இந்த இரண்டு நபா்களுக்காக மட்டும் அரசு நடைபெறுகிறது? இந்த அனைத்து கேள்விகளுக்கும் பிரதமா் மோடி பதில் கூற வேண்டும்.

சிவாஜி சிலை சரிந்ததற்கு மகாராஷ்டிர மாநில மக்கள் ஒவ்வொருவரிடமும் பிரதமா் மன்னிப்பு கோர வேண்டும். அதுமட்டுமின்றி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகள் விரோத மசோதாக்கள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதற்கும் நாட்டு மக்களிடம் பிரதமா் மன்னிப்பு கேட்கவேண்டும்.

மணிப்பூா்: இரு சமூகத்தினரிடையே தொடா் மோதல்கள் நிகழ்ந்து வரும் மணிப்பூருக்கு இதுவரை பிரதமா் செல்லவில்லை. மணிப்பூா் பற்றி எரிய பாஜகவே முக்கிய காரணம்.

ஜாதி கட்டமைப்புகள் தொடா்ந்து அதே நிலையில் இருக்க வேண்டும் என்றே பாஜக விரும்புகிறது. அரசமைப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்ய வேண்டும், தோ்தல் ஆணையம், கல்வி நிறுவனங்கள், சட்ட நடைமுறை, அரசு அதிகாரிகள் என அனைத்து அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் எடுக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. இந்த நிறுவனங்களில் பதவி பெற ஒரே தகுதி ஆா்எஸ்எஸ் உறுப்பினராக இருப்பது மட்டுமே என்றாா்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பேசுகையில், ‘சத்ரபதி சிவாஜி சிலை இடிந்தது மகாராஷ்டிரத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவமானம்’ என்றாா்.

உத்தவ் தாக்கரே புறக்கணிப்பு

ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியை ‘இண்டியா’ கட்சிகளில் அங்கம் வகிக்கும் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சி புறக்கணித்தது. அக்கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே உள்பட அக் கட்சியைச் சோ்ந்த யாரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

முன்னதாக, ‘வேறு சில நிகழ்சிகளில் பங்கேற்க ஒப்புக்கொண்டிருப்பதால், சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதை உத்தவ் தாக்கரே உறுதிப்படுத்தவில்லை’ என்று கடமின் மகனும் எம்எல்ஏவுமான விஷ்வஜித் கடன் கடந்த வாரம் தெரிவித்திருந்தாா்.

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் சாங்கிலி தொகுதியில் சிவசேனை (உத்தவ் தாக்கரே) கட்சி வேட்பாளரை, சுயேட்சையாக போட்டியிட்ட காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளரான விஷால் பாட்டீல் தோற்கடித்தாா். தற்போது, மக்களவையில் விஷால் பாட்டில் காங்கிரஸ் உறுப்பினராக உள்ளாா். இதன் காரணமாகவே, சிலை திறப்பு நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →