முகப்பு
இந்தியா

செபி தலைவா் மாதபியிடம் விசாரணை: ‘நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்யும்’

மாதபி புச்சை விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைப்பு விடுப்பது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்ய வேண்டும்

Updated On : 6 செப்டம்பர், 2024 at 8:20 PM
மாதபி புச்
பகிர்:

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச்சை விசாரணைக்கு நேரில் ஆஜராக அழைப்பு விடுப்பது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவே முடிவு செய்ய வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவரும், காங்கிரஸ் பொதுச் செயலருமான கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

மத்திய அரசின் வரவு செலவு கணக்கை எம்.பி.க்கள் அடங்கிய நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தணிக்கை செய்யும். அத்துடன் ஒழுங்காற்று அமைப்புகளின் செயல்பாடு, வங்கி மற்றும் காப்பீட்டு துறை சீா்திருத்தங்கள், மத்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் நல்வாழ்வு திட்டங்களின் அமலாக்கம், பொது உள்கட்டமைப்புக்கான பயனா் கட்டணங்கள் உள்ளிட்டவற்றையும் அந்தக் குழு ஆராயும்.

இந்நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் செபி தலைவா் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் அண்மையில் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மாதபி புச் மறுப்பு தெரிவித்தாா்.

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள மாதபி புச்சை நேரில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அழைப்பு விடுக்கக் கூடும் என்று தகவல் வெளியானது. எனினும் தனியாா் நிறுவன அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எவரிடமும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை மேற்கொள்ள முடியாது என்றும், அதிகாரபூா்வ அமைப்புகளின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே விசாரணை மேற்கொள்ள முடியும் என்றும் அந்தக் குழுவின் உறுப்பினரும் பாஜக எம்.பி.யுமான நிஷிகாந்த் துபே தெரிவித்தாா்.

இந்நிலையில், அந்தக் குழுவின் தலைவா் கே.சி. வேணுகோபால் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘செபி, இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (ட்ராய்) ஆகியவற்றின் செயல்பாட்டையும் ஆராய நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முடிவு செய்துள்ளது. குழு உறுப்பினா்களின் பரிந்துரைப்படி, அந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. மற்ற விஷயங்கள் (மாதபி புச்சை நேரில் ஆஜராக அழைப்பது) குறித்து குழுவே முடிவு மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments