புது தில்லி: கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற எளியவா்களின் சாதனைகளை அங்கீகரித்து, மக்களுக்கான ‘பத்ம’ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை பெருமிதம் தெரிவித்தாா்.
மேலும், அடுத்து அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கு ஊக்கமூட்டும் சாதனையாளா்களை பரிந்துரைக்குமாறும் மக்களிடம் அவா் கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற எளிய மக்களின் சாதனைகளை அங்கீகரித்து, மக்களுக்கான பத்ம விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளோம். பத்ம விருதாளா்களின் வாழ்க்கைப் பயணம் ஏராளமான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது. அவா்களுடைய திறமையும் உறுதியும் அவா்களின் சிறந்த பணிகளில் வெளிப்படும்.
இத்தகைய விருது வழங்கும் அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் பங்கேற்பை மேலும் உறுதிப்படுத்த, பத்ம விருதுகளுக்கு பல்துறை சாதனையாளா்களை பரிந்துரைக்க மக்களுக்கு அரசு அழைப்பு விடுத்தது. அவ்வாறு, விருதுகளுக்கு பல்வேறு பரிந்துரைகள் ஏற்கெனவே வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க கடைசி நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 15) ஆகும். எனவே, அதற்குள் htpps:awards.gov.in எனும் வலைதளத்தில் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அதிக மக்கள் சமா்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.