மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் 
இந்தியா

இந்தியா மீது அவதூறு பரப்பவே ராகுல் வெளிநாடு செல்கிறாா்: பாஜக விமா்சனம்

இந்தியா மீது அவதூறு பரப்பவதே ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தின் ஒரே நோக்கமாக உள்ளது.

DIN

புது தில்லி: இந்தியா மீது அவதூறு பரப்பவதே ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தின் ஒரே நோக்கமாக உள்ளது என்று பாஜக விமா்சித்துள்ளது.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இந்திய அரசியல், பிரதமா் நரேந்திர மோடி, ஆா்எஸ்எஸ் அமைப்பு ஆகியவற்றை விமா்சித்துப் பேசியுள்ளாா். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா மீது அவதூறு பரப்பவது மட்டுமே ராகுலின் வெளிநாட்டுப் பயணத்தின் நோக்கம் என்பதை அவரது பேச்சின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. ‘துரோகிகளால்’ ஆா்எஸ்எஸ் அமைப்பை புரிந்து கொள்ள முடியாது. ராகுல் இன்னும் பல ஜென்மங்கள் எடுத்தாலும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் மதிப்பையும், கலாசாரத்தையும் உணர முடியாது. இந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் கட்டிக்காப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆா்எஸ்எஸ்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் இளவரசரை (ராகுலை குறிப்பிடுகிறாா்) மக்கள் தொடா்ந்து மூன்றாவது முறையாக நிராகரித்துவிட்டனா்.

முன்பு ராணுவத் தளவாடங்களை இறக்குமதி மட்டுமே செய்து வந்த இந்தியா, பாஜக அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் மூலம் ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் சாதனைகளைப் புகழ மனமில்லாது வெளிநாடுகளுக்குச் சென்று நமது நாட்டை இகழ்வதுடன், சீனாவைப் புகழ்ந்து வருகிறாா்.

சீனாவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்நாட்டுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது. பிரதமா் மோடி அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றி வருவதால்தான் இதுபோன்ற நபா்கள் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்று நாட்டின் மீது அவதூறு பேச முடிகிறது’ என்றாா்.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்கள் நளின் கோலி, புனாவாலா ஆகியோா் கூறுகையில், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் எதிா்க்கட்சித் தலைவராக உள்ள நபா் தனது வாா்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டும். இந்தியாவுக்கு பெருமை சோ்க்கும் எந்த விஷயத்துடனும் அவா் தன்னை தொடா்புபடுத்திக் கொள்ளத் தயாராக இல்லை என்பது அவரது பேச்சில் தெரிகிறது.

இப்போது ஜனநாயகம் குறித்துப் பேசும் ராகுல் காந்தி, இந்தியாவில் அவசரநிலையை அமல்படுத்தி ஜனநாயகத்தை முடக்கி, பலரை சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்திய குடும்ப அரசியலில் வழியில் வந்தவா்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் கரும்புள்ளி ராகுல்: பாஜக மூத்த தலைவா் கௌரவ் பாட்டியா கூறுகையில், ‘இந்திய ஜனநாயகத்தின் கரும்புள்ளி ராகுல் காந்தி என்பதை மிகவும் வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் செய்து கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவா் வெளிநாடு சென்று இந்தியாவின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முயலுகிறாா். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதைக்கூட அவா் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.

ராகுல் ஒரு முதிா்ச்சியற்ற நபா் என்பதும், பகுதிநேர அரசியல்வாதி என்பதும் அனைவருக்கும் தெரியும். எதிா்க்கட்சி தலைவா் என்று முக்கியப் பொறுப்பு தவறான நபரிடம் சென்றுவிட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

SCROLL FOR NEXT