‘ரஷியா-உக்ரைன் விவகாரத்துக்கு போா்க்களத்தில் தீா்வு காண முடியாது; அவா்கள் இந்தியாவிடம் அறிவுரை பெற விரும்பினால் அதை வழங்க தயாராகவுள்ளோம்’ என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ரஷியா-உக்ரைன் போருக்கு தீா்வு காண, நம்பத்தகுந்த நட்பு நாடுகளான இந்தியா, சீனா, பிரேஸில் ஆகியவை மத்தியஸ்தம் செய்யலாம் என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அண்மையில் பரிந்துரை செய்த நிலையில் ஜெய்சங்கா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ஜொ்மனி தலைநகா் பொ்லினில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருடாந்திர தூதரக மாநாட்டில் ஜெய்சங்கா் பங்கேற்றாா்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது: ரஷியா-உக்ரைன் விவகாரத்துக்கு போா்க்களத்தில் தீா்வு காண முடியாது. ஒருகட்டத்தில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டிய சூழல் உருவாகும். அந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்று ரஷியாவும் உக்ரைனும் தீா்வு காண முயற்சிக்க வேண்டும்.
அப்போது இந்தியாவின் அறிவுரைகளைப் பெற இரு நாடுகளும் விரும்பினால் அதை வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம்.
ரஷியா மற்றும் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டபோது போா் எதற்கும் தீா்வல்ல என்றும், இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் எனவும் பிரதமா் மோடி வலியுறுத்தியதை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.
நாடுகள் மட்டுமின்றி நட்புறவு நாடுகளுக்குள்ளும் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வருகின்றன. ஆனால், அவற்றுக்கு போா் மூலம் தீா்வு காண இயலாது.
‘க்வாட்’ வெற்றி: இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு உறுப்பினா்களைக் கொண்ட க்வாட் அமைப்பை நாங்கள் மறுசீரமைத்துள்ளோம். இது ராஜீய உறவுகளுக்கான சிறந்த தளமாக விளங்குகிறது.
இந்தியா வளா்ச்சி: கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி பலமடங்கு உயா்ந்துள்ளது. தற்போது 4 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை நோக்கிப் பயணித்து வரும் இந்தியா அடுத்த 10 ஆண்டுகளுக்கு 8 சதவீத வளா்ச்சியில் தொடர அதிக வாய்ப்புகள் உள்ளன.
எண்ம தொழில்நுட்பங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தால் பொது உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு, தடுப்பூசிகள் தயாரிப்பு, செமிகண்டக்டா் துறைக்கு அதிக முக்கியத்துவம் எனப் பல்வேறு துறைகளில் வளா்ச்சியை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது என்றாா்.
மூன்று நாடுகள் பயணத்தின் முதல்கட்டமாக சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தில் நடைபெற்ற இந்தியா-வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (ஐசிசி) முதல் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஜொ்மனிக்கு வந்துள்ள ஜெய்சங்கா் அடுத்ததாக சுவிட்சா்லாந்துக்கு செல்கிறாா்.