இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவி வரும் நிலையில், அந்த நாட்டுடனான தூதரக ரீதியிலான உறவை முறிக்க பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினர், பாறைகளில் சீன மொழிகளில் எழுதியதாக வெளியான செய்தியையும் அவர் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலத்துக்குள் ஊடுருவல்
இந்திய - சீன சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் அஞ்சாவ் மாவட்டத்தின் கபாபு பகுதி வரை சீன ராணுவத்தினர் ஊடுருவி முகாமிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் கபாபு பகுதியில் சிறிது நேரம் முகாமிட்ட சீன ராணுவத்தினர், பாறைகளில் சீன மொழியில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், சீன உணவுப் பொருள்களும் அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கபாபு பகுதிக்கு அருகே மக்மஹோன் கோட்டில், இந்திய - திபெத் எல்லைக் காவல் படையின் சோதனைச் சாவடி அமைந்துள்ள நிலையில், சீன ராணுவத்தினர் ஊடுருவிச் சென்றுள்ளனர்.
ஏற்கெனவே, கடந்த சில ஆண்டுகளாக இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி, சீன ராணுவத்தினர் கட்டிய கட்டடங்கள் குறித்த செயற்கைக்கோள் படங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
தொடர்ச்சியாக, அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சீன வரைப்படத்தில் சேர்த்து, அதற்கு சீன மொழியில் பெயர் வைத்ததும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
தூதரக உறவை முறிக்க அழைப்பு
சீன ராணுவத்தின் ஊடுருவல் குறித்த செய்தியை பகிர்ந்ர்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“பாரத மாதாவின் மரியாதைக்கு மோடி துரோகம் செய்ததாக அறிவிப்போமோ? சீனாவுடனான தூதரக அளவிலான உறவை முறித்துக் கொள்ள கோரிக்கை வைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசு சரிவர கையாளவில்லை
அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியப் பகுதியில் 4,000 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு சீன ராணுவம் ஆக்கிரமித்த விவகாரத்தை மோடி அரசு சரிவர கையாளவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய, அடிப்படையற்ற, பொய்யான கருத்துகளை தெரிவித்து, இந்தியாவின் கண்ணியத்துக்கு ராகுல் காந்தி குந்தகம் விளைவிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.