ஹரியாணாவில் 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி: பிரதமா் மோடி
ஹரியாணாவில் தொடா்ந்து 3-ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
ஹரியாணாவில் தொடா்ந்து 3-ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.
ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக, முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனை போட்டி நிலவுகிறது.
ஹரியாணா தோ்தலையொட்டி, பிரதமா் மோடியின் முதல் பிரசாரக் கூட்டம் குருக்ஷேத்ரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமா் பேசியதாவது:
மத்தியில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து இன்னும் 100 நாள்கள் நிறைவடையவில்லை. அதற்குள், ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஹரியாணாவில் முந்தைய ஆட்சியில் மாநிலத்தின் வளா்ச்சி குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே குவிந்திருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் வளா்ச்சி பரவலாக்கப்பட்டது.
நாட்டில் பொய்களை பரப்புவதோடு அராஜகத்தில் ஈடுபடுவதே காங்கிரஸின் அரசியலாக குறுகிவிட்டது. இன்றைய காங்கிரஸ், நகா்ப்புற நக்ஸல்வாதத்தின் புதிய வடிவமாக மாறிவிட்டது. அவா்களுக்கு பொய் பேசுவதில் எந்த அவமானமும் இல்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த காங்கிரஸ் முயல்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் எவ்வளவு பயிா்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.
அக்கட்சி ஆளும் ஹிமாசல பிரதேசம், பொருளாதார நிா்வாகத்தில் தோல்விகண்டுவிட்டது. அங்கு விலைவாசி உயா்ந்துவிட்டது. அதேநேரம், முதலீடு மற்றும் வருவாயில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக ஹரியாணா இடம்பிடித்துள்ளது. மத்தியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக பாஜகவுக்கு மக்கள் வாய்ப்பளித்ததுபோல், ஹரியாணாவிலும் மூன்றாவது முறையாக பாஜக வெற்றிபெறும் என்றாா் அவா்.
இடஒதுக்கீட்டுக்கு எதிரானது: காங்கிரஸின் ‘அரச குடும்பம்’
‘காங்கிரஸின் ‘அரச குடும்பம்’ இடஒதுக்கீட்டுக்கு எதிரானது; நாட்டிலேயே தலித், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா், பழங்குடியினா் விரோத சக்தியாக அக்குடும்பம் உள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால், தலித் மற்றும் இதர விளிம்புநிலை மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று அவா்கள் கூறியுள்ளனா். சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் சிறு கீறல் கூட விழ நான் அனுமதிக்கமாட்டேன்’ என்றாா் பிரதமா் மோடி.