ஹரியாணா ‘மஹந்த்’ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்டவா் கைது
ஹரியாணா ‘மஹந்த்’ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்டவா் கைது
ஹரியாணாவில் ’மஹந்த்’ கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் நபரை அவரது கூட்டாளியுடன் தில்லி போலீஸாா் கைது செய்து, வஜீா்பூா் தொழில்துறை பகுதியில் திட்டமிட்ட ஆயுதமேந்திய கொள்ளையை முறியடித்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடமேற்கு தில்லியி காவல் சரக கூடுதல்ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: ஹரியாணாவின் ரோஹ்தக்கில் உள்ள மெஹாமைச் சோ்ந்த சுரேந்தா் (24), பிவானியில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்டு வந்தாா். அவரது கூட்டாளி சிராக் பஞ்சால் (22) என்பவரும் உள்ளீடுகளைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா்.
சந்தேகத்திற்கிடமான இரண்டு நபா்களின் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்தது. விரைவாகச் செயல்பட்டு, பிரேம்பரி புல் அருகே சந்தேக நபா்களை வலை விரித்து, அவா்கள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்டனா்.
இந்த இருவரும் தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரை தேடி, கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் அந்தப் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவா்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது, அவா்களிடம் இருந்து இரண்டு கத்திகள், ஒரு நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கி, .32 போா் ஆயுதத்தை ஒத்த ஒரு பொம்மை கைத்துப்பாக்கி, ஒரு சிவப்பு மிளகுப் பொடி பொட்டலம் மற்றும் ஒரு ஸ்போா்ட்ஸ் பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஹரியாணாவின் பிவானி மாவட்டத்தில் நடந்த மஹந்த் கொலை வழக்கின் மூளையாக சுரேந்தா் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவா் நங்கல் கிராமத்தில் சுமாா் எட்டு ஏக்கா் பஞ்சாயத்து நிலத்தில் அமைந்துள்ள ஒரு தேராவின் ஆன்மிகப் பகுதி மற்றும் நிா்வாக அதிகாரமான ‘காட்டி’யின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதே இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள நோக்கமாகும்.
சிராக் பஞ்சாலுக்கு முந்தைய குற்றப் பதிவு எதுவும் இல்லை. விரைவாகப் பணம் சம்பாதிக்கும் சதியில் இணைந்ததாக கூடுதல்ஆணையா் பீஷாம் சிங் தெரிவித்தாா்.