இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் எதுவும் சாத்தியமே..! -யோகி ஆதித்யநாத் புகழாரம்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்துச் செய்தி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இன்று(செப். 17) பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவரது தலைமையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சிகளைக் குறித்து யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கும் கட்டுரை வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி குறித்த யோகி ஆதித்யநாத்தின் கட்டுரையில் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய கருத்துகள்:

’கடந்த பத்தாண்டுகளில் உலக அரங்கில் இந்தியா தலைமைத்துவத்துக்கு உயர்ந்துள்ளதன் பின்னணியில் இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி.

உக்ரைன்-ரஷியா சண்டையில் மத்தியஸ்தம் செய்வது, மேற்காசியாவில் நிலவும் பிரச்னைகளை எதிர்கொள்வது என சர்வதேச விவகாரங்களில் தீர்வு காண்பதில் பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியாவுக்கு முக்கியத்துவம் உள்ளது.

இன்று, இந்தியர்கள் மட்டுமல்லாமல் உலக சக்திகளும் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தில் அசாத்திய நம்பிக்கை பூண்டுள்ளனர்.’

’இந்தியாவில், மோடி நவீன கால ‘பாகீரதன்’-ஆக திகழ்கிறார். இந்தியா அதன் இலக்குகளை அடைய வழிகாட்டுவதிலும், சவால்களைத் தீர்ப்பதிலும் என திறம்படச் செயலாற்றி வருகிறார்.

கடைக்கோடி கிராமத்தில் விவசாயம் செய்யும் பெண்மணியாகட்டும், தொழில் நிறுவனத்தில் உள்ள இளம் தொழில் முனைவோராகட்டும், நாட்டின் எல்லைகளில் பாதுகாப்புப் பணியிலுள்ள ராணுவ வீரராகட்டும் அல்லது வெளிநாடுவாழ் இந்தியராகட்டும், இப்படி அனைத்து தரப்பினரும் பிரதமரின் கொள்கைகள், கனவுகள், அவர் எடுக்கும் முடிவுகளில் அசாத்திய நம்பிக்கை பூண்டுள்ளனர்.

இதுவே, மக்கள் கொண்டுள்ள இந்த நம்பிக்கையே, பிரதமரை துணிச்சலான முடிவுகளை எடுத்துச் செயல்பட வைக்கிறது.’

பிரதமரின் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு உதாரணமாக, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள யோகி ஆதித்யநாத், இந்தியாவில் கலாசாரம் மறுபிறவி எடுத்திடச் செயல்பட்டவர் மோடி என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதை சிலாகித்து குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், ஆதார் அட்டை செயல்படுத்தப்பட்டுள்ளதால் நிர்வாகத்தில் ஊழல் ஒழிக்கப்பட்டு சாமானிய மக்கள் அரசுத் திட்டங்களின் பலன்களை முழுமையாகப் பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ’கரோனா பெருந்தொற்று, ரஷியா-உக்ரைன் போர் ஆகியவை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பிரதமர் மோடியின் திறன் மற்றும் நிதித்துறையில் நிபுணத்துவம் ஆகியவற்றால் இத்தகைய கடின காலங்களை இந்தியா கடந்து வந்துவிட்டது மட்டுமல்லாமல், உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், உலகில் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.’

இறுதியாக, ’புராணத்தில் தேவசிற்பி எனப் போற்றப்படும் பகவான் விஸ்வகர்மா பிறந்தநாளன்று, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளும் வருவது சிறப்பம்சமான ஒன்று. வளர்ச்சியடைந்த, தற்சார்பு நிலையை எட்டியதொரு ’புதிய இந்தியாவை’ கட்டமைப்பதில் முனைப்புடன் செயல்படும் பிரதமர், அந்த இலக்கை அடைவார் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம். மக்களின் பங்களிப்புடன் இந்த கனவு நிறைவேறும்.’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT