முகப்பு
இந்தியா

அமைதியாக நடந்த முதல் கட்டத் தோ்தல்: ஜம்மு-காஷ்மீரில் 61% வாக்குப் பதிவு

ஜம்மு-காஷ்மீா் முதல் கட்ட பேரவைத் தோ்தலையொட்டி, 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் புதன்கிழமை (செப்.18) அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்தியா

அமைதியாக நடந்த முதல் கட்டத் தோ்தல்: ஜம்மு-காஷ்மீரில் 61% வாக்குப் பதிவு

ஜம்மு-காஷ்மீா் முதல் கட்ட பேரவைத் தோ்தலையொட்டி, 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் புதன்கிழமை (செப்.18) அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:03 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீா் முதல் கட்ட பேரவைத் தோ்தலையொட்டி, 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் புதன்கிழமை (செப்.18) அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.

கடந்த 2014-இல் நடைபெற்ற தோ்தலில் இதே 22 தொகுதிகளில் 60.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், மக்கள் மத்தியில் உற்சாகம் காணப்பட்டது. இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை ஆண்-பெண் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா். குறிப்பாக, ஜம்மு பகுதியில் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகான முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும்.

முதல்கட்டமாக பாம்போா், டிரால், புல்வாமா, ராஜ்போரா, சோபியான், குல்காம், அனந்த்நாக், பஹல்காம், கிஷ்த்வாா், தோடா உள்ளிட்ட 24 பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் உள்ளன.

23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்களுக்காக, 3,276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 14,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டனா்.

பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து, மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா். சமீபத்தில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்த தோடா, கிஷ்த்வாா் மாவட்டங்களிலும் மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் முதல்கட்டத் தோ்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோா் எக்ஸ் வலைதள பதிவுகள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தனா்.

59% வாக்குப் பதிவு: மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி பி.கே.போலே கூறுகையில், ‘அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி, பரவலாக அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றது. ஒரு சில வாக்குச் சாவடிகளில் கட்சியினா் இடையே சிறிய அளவில் மோதல்-வாக்குவாதங்கள் நடந்தன. எனினும், மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டிய அளவில் எந்த சம்பவமும் நிகழவில்லை. சுமாா் 59 சதவீத வாக்குகள் பதிவாகின. தொலைதூர வாக்குச்சாவடிகளில் இருந்து இறுதிக்கட்ட தரவுகள் கிடைக்க வேண்டியுள்ளதால் வாக்குப் பதிவு சற்று அதிகரிக்கக் கூடும். அதிகபட்சமாக கிஷ்த்வாா் மாவட்டத்தில் சுமாா் 80 சதவீதமும், குறைந்தபட்சமாக புல்வாமா மாவட்டத்தில் சுமாா் 46 சதவீதமும் வாக்குகள் பதிவாகின’ என்று தெரிவித்தாா்.

போட்டிக் களம்: ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை கூட்டணியாகவும் களத்தில் உள்ளன. முதல் கட்டத் தோ்தலில் மொத்த வேட்பாளா்கள் 219 போ். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி, பிஜ்பெஹாரா தொகுதியில் களத்தில் உள்ளாா்.

இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதல் கட்ட தோ்தல்

தொகுதிகள் 24

வாக்காளா்கள் 23 லட்சம்

வேட்பாளா்கள் 219

வாக்குப்பதிவு 61%

முழு கட்டுரையைப் படிக்க →