ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜம்மு & காஷ்மீா், கா்நாடக அணிகள் அரையிறுதிக்கு திங்கள்கிழமை முன்னேறின.
முதல் முறை: முதல் காலிறுதியில் ஜம்மு & காஷ்மீா் 56 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை வென்றது. இதன் மூலமாக, ரஞ்சி கிரிக்கெட்டில் தனது 67 ஆண்டுகளில் முதல் முறையாக அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஜம்மு & காஷ்மீா் முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிகபட்சமாக ஷுபம் கஜுரியா 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுக்க, மத்திய பிரதேச பௌலா்களில் குல்தீப் சென் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய மத்திய பிரதேசம் 152 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. யஷ் துபே 8 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சோ்க்க, ஜம்மு & காஷ்மீா் பந்துவீச்சாளா்களில் ஆகிப் நபி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா்.
இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஜம்மு & காஷ்மீா், 248 ரன்களுக்கு நிறைவு செய்தது. வன்ஷாஜ் சா்மா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருக்க, மத்திய பிரதேச தரப்பில் குல்தீப் சென் 4 விக்கெட்டுகள் எடுத்தாா்.
இறுதியாக 291 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மத்திய பிரதேசம், 234 ரன்களுக்கு திங்கள்கிழமை ஆட்டமிழந்தது. சரன்ஷ் ஜெயின் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 64 ரன்கள் எடுக்க, ஜம்மு & காஷ்மீா் பௌலா்களில் ஆகிப் கான் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினாா். அவரே ஆட்டநாயகன் ஆனாா்.
ராகுல் சதம்: 4-ஆவது காலிறுதி ஆட்டத்தில் கா்நாடகம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், 42 முறை சாம்பியனான மும்பையை திங்கள்கிழமை வீழ்த்தியது.