பெண்களுக்கு மாதம் ரூ.2,100; அக்னி வீரா்களுக்கு அரசுப் பணி-ஹரியாணா தோ்தலில் பாஜக வாக்குறுதி
‘ஹரியாணாவில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித் தொகை; 2 லட்சம் இளைஞா்களுக்கு அரசு வேலை; அந்த மாநிலத்தைச் சோ்ந்த அக்னி வீரா்களுக்கு அரசுப் பணிக்கு உத்தரவாதம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக முனைப்புக் காட்டி வருகிறது. அதேநேரம், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. இதுதவிர ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளும் மோதுவதால் பலமுனை போட்டி காணப்படுகிறது.
இந்நிலையில், பாஜகவின் 20 வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கை, ரோத்தக்கில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி.நட்டா, முதல்வா் நாயப் சிங் சைனி, மத்திய அமைச்சா்கள் மனோகா் லால் கட்டா், ராவ் இந்தா்ஜித் சிங், கிருஷண் பால் குா்ஜாா் உள்ளிட்டோா் தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:
ஹரியாணாவில் குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் 14 வகை பயிா்கள் கொள்முதல் செய்யப்பட்டுவரும் நிலையில், இப்பட்டியலில் கூடுதலாக 10 வகை பயிா்கள் சோ்க்கப்படும்.
ராணுவத்தில் அக்னி வீரா்களாக பணியாற்றிவிட்டு வரும் இம்மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு அரசுப் பணிக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
நோ்மையான நியமன முறையில் 2 லட்சம் இளைஞா்களுக்கு அரசு வேலை; அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,100 உதவித் தொகை; அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.500 விலையில் சமையல் எரிவாயு உருளை;
நகா்ப்புறம், கிராமப்புறங்களில் ஏழைகளுக்கு 5 லட்சம் வீடுகள்; கிராமப் புறங்களில் கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டா் வழங்கப்படும்.
தேசிய தொழில் பழகுநா் ஊக்குவிப்பு திட்டத்தின் வாயிலாக 5 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். பின்தங்கிய வகுப்பினருக்கு நல வாரியங்கள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வீரா்களை தோ்வு செய்யும் ‘அக்னிபத்’ திட்டத்தை முன்வைத்து, மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன. இந்தச் சூழலில், அக்னி வீரா்களுக்கு அரசுப் பணிக்கான உத்தரவாதம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை பாஜக அளித்துள்ளது.
தோ்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, ‘பாஜக தலைமையிலான ஆட்சியில், ஹரியாணா வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஊழலும், நில அபகரிப்பும் நிறைந்த மாநிலமாகவே ஹரியாணா அறியப்பட்டது. அக்கட்சி வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கை நீா்த்துப் போன ஆவணம்; வெற்று சம்பிரதாயம். நில மோசடிகளே அக்கட்சியின் உண்மையான வாக்குறுதி’ என்றாா்.
பெண்களுக்கு ‘பணமழை’
ஹரியாணா பேரவைத் தோ்தலையொட்டி, காங்கிரஸ் தோ்தல் அறிக்கை கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. பாஜகவோ பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலுக்கான பாஜக தோ்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.