பாகிஸ்தானும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக பாஜக அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் 370 ஆவது பிரிவை மீட்டெடுப்பது குறித்து பாகிஸ்தான் அரசும், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகளின் கூட்டணியும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியிருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அரசும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே மாதிரியான நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அமித் ஷா விமர்சித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது எக்ஸ் பக்கத்தில் ``370 ஆவது மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளுக்கு காங்கிரஸும் தேசிய மாநாடு கட்சியும் ஆதரவளிப்பதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்து, காங்கிரஸின் நோக்கத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருவரின் நோக்கங்களும் ஒன்றே என்பதை பாகிஸ்தான் அமைச்சரின் அறிக்கை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனும் நிற்கும் ராகுல் காந்தி, நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறார்.
விமானத் தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்பது அல்லது இந்திய ராணுவத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை கூறுவது என எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியும் பாகிஸ்தானும் ஒரே மாதிரியாகவே இருந்து வருகின்றன.
ஆனால், மத்தியில் மோடி தலைமையிலான அரசு இருப்பதை, காங்கிரஸ் கட்சியும் பாகிஸ்தானும் மறந்துவிட்டன.
எனவே, காஷ்மீரில் 370 ஆவது பிரிவு மீண்டும் வரப்போவதில்லை; பயங்கரவாதமும் வரப்போவதில்லை’’ என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.