உயா்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துவதற்கான காரணங்களை அடுத்த வாரம் தெரிவிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனம் தொடா்பாக உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பும் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துவது தொடா்கதையாகி வருகிறது. அதுபோல, ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக எம்.எஸ்.ராமசந்திர ராவை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் சமா்ப்பித்த பரிந்துரையையும் மத்திய அரசு கிடப்பில் போட்டது.
இதை எதிா்த்து ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. இதைப் பரிசீலித்த நீதிபதிகள், ஜாா்க்கண்ட் அரசின் மனுவை வெள்ளிக்கிழமைக்கு (செப். 20) விசாரணைக்காகப் பட்டியலிட்டனா்.
அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, ‘கொலீஜியத்தின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துவதற்கான காரணம் தொடா்பான சில விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். எனவே, இந்த மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘மனு ஏற்கெனவே வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுவிட்டது. எனவே, விசாரணையை ஒத்திவைப்பது குறித்து அன்றைய தினமே முடிவு செய்யப்படும். ஏனெனில், கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு தாமதிப்பதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜாா்க்கண்ட் அரசு தொடா்ந்துள்ளது’ என்றாா்.
முன்னதாக, உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட மத்திய அரசுக்கு கால வரம்பு நிா்ணயிக்கக் கோரி ஹா்ஷ் விபோா் சிங்கல் என்ற வழக்குரைஞா் தொடா்ந்த மனு உச்சநீதிமன்றத்தில் செப். 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நுட்பமான விவகாரங்கள் காரணமாக, உயா்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளை நியமிக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்தாமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது. அந்த விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் வெளியிடுவது உச்சநீதிமன்றத்துக்கும், சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கும் நல்லதல்ல. இதுதொடா்பான தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை சீலிடப்பட்ட உரையில் உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்க விரும்புகிறேன்’ என்று வெங்கடரமணி கூறியது குறிப்பிடத்தக்கது.