உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிப்பிள் என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தின் யூ டியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் நேரலை செய்யும் பணிகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹேக் செய்யப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தில், கிரிப்டோகரன்சி குறித்து விளம்பரப்படுத்தப்படும் தகவல்கள் தற்போது இடம்பெற்றுள்ளன. அதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் விடியோக்கள் அதில் இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பார் அன்ட் பென்ச் தகவல் வெளியிட்டிருக்கிறது. மக்களின் நலன் கருதி, உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைகள் அனைத்தும், இந்த யூடியூப் பக்கம் மூலமாகத்தான் நேரடியாகவும் விடியோக்களாகவும் ஒளிபரப்பப்பட்டு வந்தன.
அண்மையில், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் வழக்குகள் நேரலை செய்யப்பட்டு வந்தன.
வழக்கு விசாரணைகள் தொடர்பான விடியோக்களும் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வந்த நிலையில், அவை அனைத்தும் அழிக்கப்பட்டு, பிரைவேட் ஆக்கப்பட்டுள்ளது. அதனால், அவை அனைத்தும் பிளாங்க் ஆகியிருக்கிறது.
உடனடியாக, யூடியூப் சேனலை மீட்கும் பணியில், தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளையில், யூடியூப் பக்கத்தை முடக்கிய நபர்கள் குறித்தும் விசாரணை தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.