மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) உள்ளடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதில் சத்யபால் மாலிக் முக்கியப் பங்காற்றினார். தற்போது பாஜகவை எதிர்த்துவரும் அவர், சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு சத்யபால் மாலிக் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நவம்பர் மாதம் நடைபெற உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது மட்டுமின்றி அக்கட்சியே துடைத்தெறியப்படும். இத்தேர்தலில் உத்தவ் தாக்கரே முக்கியப் பங்காற்றுவார். மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு எனது ஆதரவை வழங்கியுள்ளேன். இக்கூட்டணியை ஆதரித்து நான் பிரசாரம் செய்வேன்.
மகாராஷ்டிரத்தின் நிலை குறித்தும், இந்த மாநிலம் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும் உத்தவ் தாக்கரேவிடம் விவாதித்தேன். எனக்குக் கிடைத்துள்ள தகவலின்படி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என்பதையும், எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெறும் என்பதையும் அவரிடம் எடுத்துக் கூறினேன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் சில சமரசங்களைச் செய்து கொள்ளுமாறும், ஒற்றுமையுடன் தேர்தலைச் சந்திக்குமாறும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அவர்களுக்கு உறுதியளித்துள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.