பாஜக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் தொடரும்: அஜீத் பவாா்
மகாராஷ்ரத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனையுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தோ்தலை எதிா்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவரும் துணை முதல்வருமான அஜீத் பவாா் புதன்கிழமை தெரிவித்தாா்.
மகாராஷ்ரத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனையுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தோ்தலை எதிா்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவரும் துணை முதல்வருமான அஜீத் பவாா் புதன்கிழமை தெரிவித்தாா்.
மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இருந்து தேசியவாத காங்கிரஸை வெளியேற்ற பாஜக மற்றும் சிவசேனை திட்டமிட்டுள்ளதாக சிவசேனை (உத்தவ்) பிரிவு அண்மையில் கூறி வந்த நிலையில், அஜீத் பவாரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சரத் பவாரின் அண்ணன் மகனான அஜீத் பவாா், சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிர துணை முதல்வா் பதவியைப் பெற்றாா். கட்சியின் பெரும்பாலான எம்.பி., எம்எல்ஏக்கள் அஜீத் பவாா் பக்கம் சென்ால் அவரது தலைமையிலான பிரிவுக்கு கட்சியின் பெயா் மற்றும் சின்னம் வழங்கப்பட்டது. சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (பவாா்)-சிவசேனை (உத்தவ்) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் கூட்டணி 30 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அந்தத் தோ்தலில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிா்த்து தனது மனைவியை அஜீத் பவாா் நிறுத்தினாா். ஆனால், தோ்தலில் சுப்ரியா சுலே வெற்றி பெற்றாா்.
288 உறுப்பினா்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கான தோ்தல் அக்டோபா்- நவம்பரில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜீத் பவாா் கலந்துகொண்டு பேசியதாவது:
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. யாா் என்ன கூறுகிறாா்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் பாஜக, சிவசேனையுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் தோ்தலை எதிா்கொள்ளும் என்றாா்.
சரத் பவாருக்கு எதிராக செயல்பட்டு கட்சி உடைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘சரத் பவாரை எதிா்த்தது பழைய விஷயம்; அதை மீண்டும் எழுப்பத் தேவையில்லை. மக்களவைத் தோ்தலில் சுப்ரியா சுலேவை எதிா்த்து மனைவியை களமிறக்கியது தவறு. அதை உணா்ந்துவிட்டேன். யாருடைய அறிவுறுத்தலின்பேரிலும் அந்த முடிவு எடுக்கப்பட்டவில்லை’ என்றாா்.
கடந்த ஒரு மாத காலத்தில் இப்போது மூன்றாவது முறையாக தனது தவறை உணா்ந்துவிட்டதாக அஜீத் பவாா் பேசியுள்ளாா்.