பாராசிட்டமால், பான் டீ, கால்சியம் மாத்திரைகள் உள்பட மக்கள் மிக அதிம் பயன்படுத்தும் மருந்துகள் உள்பட 53 மருந்துகள், நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இல்லை என்று இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, கடந்த மாதங்களில் நடத்தப்பட்ட தொடர் ஆய்வுகளின் முடிவுகள், அதனைப் பயன்படுத்துவது தொடர்பான கவலையை அதிகரித்துள்ளது. பொதுவாகவே மாத்திரைகளை உட்கொள்ளும்போது, ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பது எழுதப்பட்ட விதி. இடப்படி தரமற்ற மாத்திரைகளை உட்கொள்வதால் என்னவாகும் என்பது எழுதப்படாத விதியாக மாறியிருக்கிறது என்று புலம்புகிறார்கள் இந்த மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மக்கள்.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, பாராசிடமால், விட்டமின் டி, கால்சியம் சத்து மாத்திரைகள், உயர் ரத்த அழுத்த மாத்திரைகள், நீரிழிவு மாத்திரைகள், நிர்ணயிக்கப்பட்ட தர அளவில் இல்லை. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ஒவ்வொரு மாதமும் தன்னிச்சையாக மாத்திரைகளின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள். அதன்படி, ஆகஸ்ட் மாத ஆய்வு முடிவு இந்த தகவல்களை அளித்திருக்கிறது.
விட்டமின் சி, டி3 மாத்திரைகள், ஷெல்கால், விட்டமின் பி காம்ப்ளெக்ஸ், விட்டமின் சி சாஃப்ட்ஜெல்ஸ், ஆன்டி-ஆசிட் பான்-டி, பாராசிட்டமால் மாத்திரைகள் (ஐபி500 எம்.ஜி.), நீரிழிவு மாத்திரையான கிளிமிபிரைடு, ரத்த அழுத்த மாத்திரையான டெல்மிசார்டன் போன்ற மக்கள் அதிகம் வாங்கும் மாத்திரைகளே இந்த தரக்கட்டுப்பாட்டுச் சோதனையில் தோல்வி அடைந்துவிட்டன. சத்து மாத்திரைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஷெல்கால் மாத்திரையும் தோல்வியடைந்திருக்கிறது.
இந்த மருந்துகளை ஹெடெரோ டிரக்ஸ், ஆல்கெம் லெபாரடரிஸ், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடட் உள்ளிட்ட பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
கொல்கத்தா மருந்து ஆய்வகக் கூடத்தில், கிளாவம் 625, பான் டி போன்ற மாத்திரைகள் போலியானவை என்று கண்டுபிடித்துள்ளது. குழந்தைகளுக்கு சாதாரண தொற்றுகளுக்குக் கொடுக்கும் மருந்தான கெபோடெம் எக்ஸ்பி 50 மருந்தும் தரக்கட்டுபாட்டு சோதனையில் தோல்வியடைந்திருக்கிறது.
இது தொடர்பாக கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் மருந்து நிறுவனங்கள், சோதனையில் தோல்வியடைந்த மருந்துகள், தங்கள் நிறுவனத் தயாரிப்பு அல்ல என்றும் போலி மருந்துகள் என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.