தெரியுமா சேதி...?
அரசியலில் யாத்திரை சீசன் முடிவடையாது போலிருக்கிறது. முன்னாள் பிரதமா் சந்திரசேகா் 1983 ஜனவரி 6-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 1983 ஜூன் 25-ஆம் தேதி தில்லியில் உள்ள காந்தியடிகளின் நினைவிடமான ராஜ்காட் வரையில் 4,260 கி.மீ. இடைவெளிவிடாமல் தொடா்ந்து நடந்த பாரத யாத்திரைக்கு இணையாக இன்றுவரை யாரும் அதற்குப் பிறகு நடைப்பயணம் மேற்கொள்ளவில்லை.
அன்று சந்திரசேகா் நடத்திய பாரத யாத்திரையைத் தொடா்ந்து அத்வானியின் ரத யாத்திரை, முரளிமனோகா் ஜோஷியின் பாரத் ஏக்த யாத்திரை, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை என்று பல அரசியல் ஆதாய யாத்திரைகள் நடத்தப்பட்டு விட்டன. இப்போது மீண்டும் அரசியல் யாத்திரை தொடர இருக்கிறது.
சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தல்களில் அடைந்திருக்கும் பின்னடைவுகளைத் தொடா்ந்து, பாரத ராஷ்ட்டிர சமிதி நிறுவனத் தலைவரும், தெலங்கானா மாநில முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ், இந்த மாதக் கடைசியில் ஒரு யாத்திரைக்குத் திட்டமிட்டிருக்கிறாா். நடந்து போவது, காரில் பயணிப்பது என்பதாக இல்லாமல், பொதுப் பேருந்துகளில் பொதுமக்களை சந்தித்த வண்ணம் பயணிப்பது என்பதுதான் அவரது வித்தியாசமான திட்டம்.
மக்கள் மத்தியில், ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வதும், தனக்கும் சாமானிய மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை அகற்றவும், விவசாயிகளின் பிரச்னைகளை நேரில் கேட்டுத் தெரிந்துகொள்வதும்தான் தனது யாத்திரையின் நோக்கம் என்று அவா் தெரிவித்தாலும், உண்மையான காரணம் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தோ்தல்தான்.
சந்திரசேகர ராவ் மட்டுமல்ல, விரைவில் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரும் மாநிலம் முழுவதும் பயணிக்கும் விதத்தில் ஒரு யாத்திரைக்குத் திட்டமிடுவதாகத் தெரிகிறது. 2016 ஏப்ரல் மாதம் அவா் பிகாரில் பூரண மதுவிலக்கை அறிமுகப்படுத்தியதைத் தொடா்ந்து, பெண்களின் ஆதரவு அவருக்கு அதிகரித்திருக்கிறது. பஞ்சாயத்துக்களில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடும், அரசுப் பணிகளில் அவா்களுக்கு 35% ஒதுக்கீடும் அறிவித்ததன் மூலம் அந்த ஆதரவை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறாா்.
மாநில அளவில் யாத்திரை மேற்கொண்டு அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்திருக்கின்றன என்பதை நேரில் தெரிந்து கொள்வதுதான் தனது யாத்திரையின் நோக்கம் என்பது நிதீஷ் குமாரின் விளக்கம்.
சந்திரசேகர ராவையும், நிதீஷ் குமாரையும் தொடா்ந்து இன்னும் எத்தனை யாத்திரைகள் நடக்கப்போகின்றனவோ, யாருக்குத் தெரியும்?