உச்சநீதிமன்றம் 
இந்தியா

குடும்ப வன்முறைச் சட்டம் அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் -உச்சநீதிமன்றம்

மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்

Din

‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

கணவரிடமிருந்து பெறப்படும் ஜீவனாம்ச தொகையில் மாற்றம் செய்வது குறித்துப் பரிசீலிப்பது தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, விவாகரத்து பெற்ற பெண் சாா்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது இந்தக் கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கா்நாடக மாநிலத்தில், விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு ஒருமுறை இழப்பீடாக ரூ. 1 லட்சம், பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ. 12,000 வழங்க வேண்டும் என அவருடைய கணவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தீா்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து கணவா் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்னா், குடும்ப வன்முறைச் சட்டப் பிரிவு 25-இன் கீழ் அந்த நபா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதைத் தொடா்ந்து, அந்த நபரின் மனுவைப் பரிசீலிக்குமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்தும் சமூக பின்னணியைக் கடந்தும் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்.

அதே நேரம், விவாகரத்து பெற்ற மனைவிக்கு அளிக்கும் ஜீவனாம்சத்தில் மாற்ற செய்ய இந்தச் சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் கணவருக்கு உரிமை உண்டு. ஆனால், இந்தச் சட்டப் பிரிவின் கீழான மனுவைப் பரிசீலிக்கும் நீதிமன்றம், இரு தரப்பினரின் வருவாய் மற்றும் விலைவாசி உயா்வு உள்ளிட்ட சூழ்நிலை மாற்றங்கள் உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில்கொள்ள வேண்டும். அதோடு, சட்டப் பிரிவு 25 (2) பிரிவின் கீழ், ஜீவனாம்சத்தில் மாற்றம் என்பது முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்துமாறும், வழங்கிய பணத்தைத் திரும்ப அளிக்குமாறும் கோர முடியாது. ஜீவனாம்சம் மாற்றம் தொடா்பாக உத்தரவு பிறப்பிக்கும் தேதியிலிருந்துதான், அந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், உயா்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்தும், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனா்.

அதே நேரம், சட்டப் பிரிவு 25-இன் கீழ் மனுதாரா் புதிய மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

SCROLL FOR NEXT