தீபாவளி மற்றும் சத் பூஜை முன்னிட்டு இதுவரை 5,975 சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதியும், சத் பூஜை நவம்பர் முதல் வாரத்திலும் கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நகரப் பகுதிகளில் இருப்போர் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
இந்த நிலையில், பண்டிகை காலத்தில் சிறப்பு ரயில்கள் குறித்து அறிவிப்பை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் வெளியிட்டுள்ளார்.
5,975 சிறப்பு ரயில்கள்
புதுதில்லியில் வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்து அஸ்வினி வைஸ்ணவ் பேசியதாவது:
“பண்டிகை காலத்தை முன்னிட்டு 108 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் சத் பண்டிகைக்காக 12,500 பெட்டிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2024-2025 நிதியாண்டில் மட்டும் இதுவரை 5,975 சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் தீபாவளி பண்டிகை காலத்தில் ஒரு கோடி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும்.
கடந்த 2023- 2024ஆம் ஆண்டில் பண்டிகை காலங்களில் மொத்தம் 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.
கவாச் 4.0
முன்னதாக, கடந்த 24ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் கவாச் 4.0 திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், நாட்டில் முதல்முறையாக சவாய் மாதோபூரில் கவாச் 4.0 திட்டத்தை தொடக்கி வைத்தார்.
மேலும், வரும் ஆண்டுகளில் 10 ஆயிரம் இன்ஜின்கள் மற்றும் 9 ஆயிரம் கிலோமீட்டர் கவாச் 4.0 திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.