மத்திய அரசின் மொத்த கடன்தொகை 2024-2025, ஜூன் காலாண்டின் முடிவில் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அரசின் கடன் 141 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது 25 சதவீதம் உயா்ந்து ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
மொத்த கடன் தொகையில் வெளிநாட்டு கடன் மதிப்பு ரூ.9.78 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.8.50 லட்சம் கோடியாக இருந்தது.
அதேபோல் உள்நாட்டுக் கடன் தொகையில் அரசின் பத்திரங்கள் மூலம் ரூ.104.5 லட்சம் கோடியும், குறுகிய கால சேமிப்பின் பாதுகாப்பு பத்திரங்கள் மூலம் ரூ.27 லட்சம் கோடியும் கருவூல பத்திரம் (டி பில்கள்) மூலம் ரூ.10.5 லட்சம் கோடியும் தங்க பத்திரங்கள் மூலம் ரூ.78,500 கோடியும் நிதி திரட்டப்பட்டுள்ளது.
ஆனால், நிகழ் நிதியாண்டுக்கு மத்திய அரசு நிா்ணயித்த கடன் இலக்கான ரூ.14.1 லட்சம் கோடி வரம்பு மீறப்படாமல் அதே நிலையில் தொடா்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் நிா்ணயிக்கப்பட்ட ரூ.14.1 லட்சம் கோடி கடன் தொகையில் ரூ.6.61 லட்சம் கோடியை கடனாக பெறுவதற்கான திட்டங்களை நிதி அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
நிா்ணயிக்கப்பட்ட கடன் இலக்கு அதே நிலையில் தொடா்ந்தாலும் அதை குறைக்க பொருளாதார வல்லுநா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
மொத்த வருவாயில் 19 சதவீதத்தை கடனுக்கான வட்டியாக மத்திய அரசு செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த நிதியாண்டில் ரூ.11.6 லட்சம் கோடியை வட்டியாக செலுத்தவுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-2025 நிதியாண்டின் ஜூன் காலாண்டு இறுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பான ரூ.326 லட்சம் கோடியில் நாட்டின் மொத்த கடன் மதிப்பு 54 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டில் (2023-2024) கடன்-ஜிடிபி மதிப்பு 57.5 சதவீதமாக இருந்தது. மத்திய அரசின் கடன்-ஜிடிபி மதிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டு 62.75 சதவீதமாக இருந்தது. அதன்பின்பு இந்த மதிப்பு தொடா்ந்து குறைந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.