உ.பி.யில் இருந்து புரி நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மஹமத்நகர் பாட்னா அருகேயுள்ள வயலில் புரிக்கு சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து சாலையை விட்டு விலகிச்சென்று ஓரத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் ஜலேஸ்வரில் உள்ள ஜி கே பட்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலத்த காயமடைந்த 17 பேர் பாலசோர் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்திலிருந்து வாரணாசி, கயா, கங்கா சாகர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டு 57 பயணிகளை ஏற்றிக்கொண்டு புரிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக ஜலேஸ்வர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ரஞ்சன் குமார் சேதி தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் கிராம மக்கள் காயமடைந்த பயணிகளை மீட்டனர்.
பேருந்தில் பயணித்த 14 வயது சிறுவன் உள்பட ஏழு பேரை பேருந்திலிருந்து தீயணைப்புத் துறையினர் வெளியில் எடுத்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தலைமறைவாகியுள்ளதா போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், பாலசோர் மாவட்ட நிர்வாகம் பேருந்து விபத்துக்கான உதவி மைய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
பேருந்தில் பயணித்தவர்கள் குறித்து விசாரணைகள் மற்றும் உதவிகளுக்கு ஜி.கே.பட்டர் மருத்துவமனை ஜலேஸ்வர்: 9348392334, 7978230562, மாவட்ட தலைமை மருத்துவமனை பாலசூர்: 7894720599 / 9692077708 இந்த எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.