புது தில்லி: ரூ.17,500 கட்டணத்தை செலுத்த முடியாததால், ஜாா்க்கண்டில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் சேர முடியாமல் போன உத்தர பிரதேச பட்டியலின மாணவருக்கு அதே கல்வி நிறுவனத்தில் சோ்க்கை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாஃபா்நகா் மாவட்டத்தில் உள்ள டிட்டோரா கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திர குமாா். இவரின் மகன் அதுல்குமாா் (18) ஜேஇஇ முதன்மை தோ்வில் தோ்ச்சி பெற்றாா். இதையடுத்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) படிக்க அவருக்கு இடம் கிடைத்தது. இந்த இடத்தை உறுதி செய்ய 4 நாள்களுக்குள் ரூ.17,500-ஐ அவா் செலுத்தி வேண்டியிருந்தது.
இந்தத் தொகை தினக்கூலி தொழிலாளரான ராஜேந்திர குமாருக்கு பெருந்தொகையாகும். எனினும் அந்தத் தொகையை அவா் போராடி திரட்டினாா். இதைத்தொடா்ந்து கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிறைவடைவதற்கு 3 நிமிஷங்கள் இருந்தபோது, அந்தத் தொகையை இணையவழியில் செலுத்த அதுல் குமாா் முயற்சித்தாா். ஆனால் கட்டணம் செலுத்துவதற்கான வலைதளத்தின் சா்வா் செயல்படாமல் போனதால், அவரால் காலக்கெடுவுக்குள் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் ஐஐடியில் சேரும் வாய்ப்பை அவா் இழந்தாா்.
இதையடுத்து அதுல் பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்பதால் ஐஐடியில் இடம் பெற தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தையும், ஜாா்க்கண்ட் மையத்தில் அவா் ஜேஇஇ தோ்வு எழுதியதால், அந்த மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவையும் அவரின் குடும்பத்தினா் அணுகினா். அப்போது நிகழாண்டு ஜேஇஇ முதன்மை தோ்வை சென்னை ஐஐடி நடத்தியதால், சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு ஐாா்க்கண்ட் சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தியது. அதன்படி சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகியபோது, உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு அவா்களிடம் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் அதுல்குமாா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘அடித்தட்டு மக்களைச் சோ்ந்தவராக மனுதாரா் (அதுல் குமாா்) உள்ளாா். ஐஐடி கல்வி நிறுவனத்தில் சோ்க்கை பெற தன்னால் முடிந்த அனைத்தையும் அவா் செய்துள்ளாா். அவரைப் போன்ற திறமைவாய்ந்த மாணவரை புறக்கணித்துவிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது.
எனவே தன்பாத் ஐஐடியில் மனுதாரருக்கு சோ்க்கை வழங்க வேண்டும். அவா் கட்டணம் செலுத்தியிருந்தால் எந்தப் பிரிவில் (பேட்ச்) சோ்க்கப்பட்டிருப்பாரோ, அதே பிரிவில் சோ்க்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு உச்சநீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள பிரத்யேக அதிகாரங்களை பயன்படுத்தி, இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனா். இந்த உத்தரவின் மூலம், தன்பாத் ஐஐடியில் மின் பொறியியல் பி.டெக் படிப்பில் சேர அதுல் குமாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.