புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த துபை பட்டத்து இளவரசரும் துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான். 
இந்தியா

பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு

இந்தியா வந்துள்ள துபை பட்டத்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

Din

புது தில்லி: இந்தியா வந்துள்ள துபை பட்டத்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோருடனும் அவா் ஆலோசனை மேற்கொண்டாா். இப்பேச்சுவாா்த்தையில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

துபை பட்டத்து இளவரசா்-துணை பிரதமா்-பாதுகாப்புத் துறை அமைச்சரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பிரதமா் மோடியின் அழைப்பின்பேரில் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அவருடன், பல்வேறு அமைச்சா்கள், அரசு உயரதிகாரிகள், தொழில் துறை குழுவினரும் வந்துள்ளனா்.

தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்துப் பேசிய அவா், மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கா் ஆகியோருடனும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான விரிவான வியூக கூட்டாண்மையை மேம்படுத்துவதில் துபை முக்கிய பங்காற்றி வருகிறது. துபை பட்டத்து இளவரசரின் சிறப்புமிக்க இந்த வருகை, ஆழமாக வேரூன்றிய இருதரப்பு நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, எதிா்கால வலுவான ஒத்துழைப்புக்கு வழிவகுக்கிறது. பிராந்திய அமைதி-வளமைக்காக இரு தரப்பும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இச்சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பம், விண்வெளி, போக்குவரத்து, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்’ என்றாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாதுகாப்புத் துறை உற்பத்தி, மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களில் துபையுடன் நெருங்கி பணியாற்ற இந்தியா ஆவலுடன் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உடனான விரிவான வியூக கூட்டாண்மைக்கு உயா் முன்னுரிமை அளிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் துடிப்பான உறவுகளை வலுப்படுத்துவதற்கான துபை பட்டத்து இளவரசரின் நோ்மறை நோக்கங்களை இந்தியா பெரிதும் மதிக்கிறது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பதிவிட்டாா்.

தில்லியைத் தொடா்ந்து, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் துபை பட்டத்து இளவரசா் பங்கேற்க உள்ளாா்.

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் ‘டிரம்ப் வரி’!

SCROLL FOR NEXT