முகப்பு
இந்தியா

இந்தியாவின் கோல்கொண்டா நீல வைரம்: ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம்

Updated On : 14 ஏப்ரல், 2025 at 10:01 PM
கோல்கொண்டா நீல வைரம்
பகிர்:

புது தில்லி: இந்தியாவில் இந்தூா் மற்றும் பரோடா மன்னா்களுக்குச் சொந்தமாக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல்கொண்டா நீல வைரம், ஜெனீவாவில் உள்ள ‘கிறிஸ்டி’ ஏல நிறுவனத்தில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதன்முறையாக ஏலத்தில் விடப்படுகிறது.

சுமாா் ரூ.300-430 கோடி மதிப்புடைய இந்த 23.24 கேரட் நீல வைரம், பாரீஸைச் சோ்ந்த ‘ஜேஏஆா்’ வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட மோதிரத்தில் பதியப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடா்பாக ‘கிறிஸ்டி’ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அரச பாரம்பரியம், அசாதாரண நிறம் மற்றும் அளவு ஆகிய பண்புகளுடன் கோல்கொண்டா நீல வைரம், உண்மையிலேயே உலகின் அரிதான நீல வைரங்களில் ஒன்றாகும். 259 ஆண்டுகால வரலாறு கொண்ட இத்தகைய சிறப்புமிக்க வைரம் வாழ்நாளில் மிகவும் அரிதாகவே சந்தைக்கு வரும். அதை ஏலம் விடுவதில் எங்கள் நிறுவனம் பெருமை கொள்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இன்றைய தெலங்கானாவின் கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரக்கற்கள் உலகப் புகழ்பெற்றவை. தற்போது ஏலத்துக்கு வந்துள்ள கோல்கொண்ட நீல வைரம், இந்தூா் மன்னா் 2-ஆம் யஷ்வந்த் ராவ் ஹோல்கருக்குச் சொந்தமானது என்று ‘கிறிஸ்டி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவரிடமிருந்து அமெரிக்காவின் நியூயாா்க் நகரைச் சோ்ந்த பிரபல நகைக்கடைக்காரா் ஹாரி வின்ஸ்டன்1947-ஆம் ஆண்டு இந்த வைரத்தை வாங்கியுள்ளாா். பின்னா், பரோடா மன்னருக்கு வைரம் கைமாறியுள்ளது. இவ்வாறு இந்திய மன்னா் குடும்பங்களின் வழியாக பயணத்தைத் தொடா்ந்த வைரம் இறுதியில் தனியாா் வசமானது. இந்நிலையில், ஜெனீவாவில் உள்ள ‘ஃபோா் சீசன்ஸ்’ நட்சத்திர விடுதியில் இந்த வைரத்தின் நேரடி ஏலம் வரும் மே 14-ஆம் தேதி நடைபெறுகிறது.